தமிழக நிதிநிலை அறிக்கை: ஏழை எளிய மக்களுக்குப் பயன்படாத அறிவிப்புகள்!

2492 Views
தமிழக நிதிநிலை அறிக்கை: ஏழை எளிய மக்களுக்குப் பயன்படாத அறிவிப்புகள்!
Screen-Shot-2019-02-08-at-4.06.40-PM
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழக சட்டமன்ற பேரவையில் இன்று நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் 14வது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின்னர், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து இந்த பங்கைப் பெற உரிய அழுத்தம் கொடுக்காமல் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு வாசலைத் திறந்திருப்பது வேதனைக்குரியது.
ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ள தமிழக அரசு, பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.48.70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வேடிக்கையானது.
விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிட்டிருக்கும் தமிழக அரசு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகரத் திட்டத்தைக் கைவிட மறுப்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலையாகும்.
2019-2020-ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 3,97,495.96 கோடி. கடந்த ஆண்டை விட 41,651.96 கோடி அதிகம் எனத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர், அதற்கான வருவாயைப் பெருக்குவதற்காக எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கவில்லை.
மழை மற்றும் புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்மைக்கு என ரூ.10,559 கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போல் தெரிகிறது.
மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பும், புயலால் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயம் சார்ந்தே இருந்த தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.
பல உயிர்களைப் பலிவாங்கிய நாசகர ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்துமூடக் கொள்கை முடிவை வெளியிடாதது தமிழக அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது.
சிறுபான்மையினர் நலத்துறைக்கு வெறும் 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதும், சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் தொழிலுக்காக வழங்கப்படும் கடனுக்கான வட்டியை பெயர்மாற்றி சேவைக்கட்டணம் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நிதிநிலை அறிக்கையில் புறந்தள்ளியுள்ளது ஏமாற்றமளிக்கிறது.
அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பு இல்லாதது தமிழக அரசிற்கு மக்கள் நலனில் அக்கறை இன்மையைக் காட்டுகிறது.
வடமாவட்டங்களில் மழை பொய்த்துள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா குடிநீர் விநியோகம் குறித்து திட்டங்களை அறிவிக்காமல் பொத்தாம் பொதுவாக நிதி ஒதுக்கி உள்ளது ஏற்புடையது அல்ல.
சிறு குறு தொழில்களில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
பொதுவாக இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத அறிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply