தமிழக ஆளுநர் சட்டபேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

1995 Views
தமிழக ஆளுநர் சட்டபேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
mhj1 (2)
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழக அரசியல் தினமும் நடைபெற்றுவரும் மாற்றங்களினாலும், ஆட்சியையும், கட்சியையும் தக்கவைக்க நடக்கும் பேரங்களாலும், தொடர்ந்து நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, டெங்கு காய்ச்சல், ஹைட்ரோபனுக்கு எதிராக நெடுவாசில் 130 நாட்களாக போராட்டம், ஒன்.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென கதிராமங்கலத்தில் 100 நாட்களுக்கு மேல் நடத்துவரும் தொடர் போரட்டம் போன்ற பிரச்சினைகளாலும் தமிழக மக்கள் தொடர்ந்து வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசிற்கு தமது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறி திரு. டி.டி.வி. தினகரன் அணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் தமிழக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இந்த ஆதரவு வாபஸ் கடிதத்தினால் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. பெருபான்மையை இழந்த அரசு ஆட்சியையும், அதிகாரத்தையும் தக்கவைக்க  தொடர்ந்து குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்.  அதிமுகவில் நடக்கும் அரசியல் போட்டியின் காரணமாக அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதுபோன்ற இக்கட்டான சூழலில், தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருட்களை சட்டமன்றப் பேரவைக்குள் கொண்டுவந்தனர் என திமுக செயல் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் உட்பட 20 திமுக உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டி உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப தமிழக அரசு முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது.
 ஏற்கெனவே பெருபான்மையை இழந்த எடப்பாடி அரசு திமுகவிற்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப துளியளவும் அதிகாரம் இல்லை. சம்பவம் நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கு மேலான பிறகு, தற்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், திமுக உறுப்பினர்களை உரிமை மீறல் என்ற போர்வையில் அவர்களை முடக்க நினைப்பது ஏற்கத்தக்கதல்ல.
 தமிழக ஆளுநர் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக சட்டமன்றப் பேரவையைக் கூட்டவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெருபான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply