தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1790 Views
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என கூறிய மத்திய அரசு தற்போது திடீரென்று ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலையாகும்.
மண்னை மலடாக்கி, சுற்றுச்சுழலைப் பெரிதும் பாதிக்கும் இதுபோன்ற நாசகாரத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் அனைத்து திட்டத்திற்கும் மௌனமாக இருந்துவரும் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. காவிரி பாசனப் பகுதிகளில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்கள் நாசமாகி நெற்களஞ்சியமான காவிரி பாசனப்பகுதி பாலைவன பகுதியாக மாறும் சூழல் உருவாகும்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை உருவாக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தக்கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குக் கொடுக்கப்பட்டு அனுமதியை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசையும், இயற்கைக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற திட்டங்களைத் தமிழகத்திலிருந்து விரட்டக் காவிரி பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply