தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2120 Views
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
jawahirullah
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவை சந்தித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மேற்படி 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 18 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது.
இந்தத் தகுதி நீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின்பு திமுக தலைவர் கலைஞர், அதிமுக எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் மறைவாலும் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருஷ்ண ரெட்டி தகுதி நீக்கத்தால் அத்தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தமாக தமிழக சட்டமன்றப் பேரவையில் 21 சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு நீண்ட காலம் இந்த எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் ஜனநாயக முறையில் அரசிற்கு எடுத்துச் செல்ல மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி இல்லாமல் நீண்ட காலம் இருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

மக்கள் விரோத அரசாகச் செயல்படும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி, தேர்தல் நடத்தினால் படுதோல்வி அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே தொடர்ந்து இத்தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நடத்த உரிய அழுத்தங்களைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதிமுக ஆட்சியின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலே காலூன்ற நினைக்கும் பாஜகவும் இந்த ஆட்சியைக் காக்க பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நியாயப்படி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிமுகவும் பாஜகவும் திரைமறைவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
நாட்டில் உள்ள எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை உண்டு. இந்த உரிமையை ஜனநாயக ஆட்சிமுறையால் மட்டுமே அளிக்க முடியும். இந்த ஜனநாயகம் தேர்தல்களால் மட்டுமே சாத்தியமாகும்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்காக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தை மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply