தமிழகத்திலிருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என எச்.ராஜா கருத்து! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!

1856 Views
தமிழகத்திலிருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என எச்.ராஜா கருத்து! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!
raja
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே ஆட்சி புரிந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெனில் சிலை அகற்றப்பட்டுள்ளது, அதன் தொடர்ச்சி பாஜகவின் எச்.ராஜா திரிபுராவில் இன்று லெனில் சிலை, நாளைத் தமிழகத்தில் பெரியாரின் சிலை என்றும், “கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை, நாளைத் தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்றும் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எச்.ராஜாவின் வெறுப்பு உமிழும் கருத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜக ராஜாவின் இந்தக் கருத்து வெறும் சிலையை அகற்றவது மட்டுமல்லாமல் தந்தை பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்குக் கற்றுக்கொடுத்த சமூகநீதி, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் போன்றவற்றை தகர்க்கும் நோக்கில் கூறப்பட்டுள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
   உயர் வகுப்பினர் தமிழர்களின் பண்பாட்டை அழித்து அவர்களின் பண்பாட்டைப் புகுத்தி அதன் பெயராலேயே தமிழர்களை அடிமைப்படுத்திய நேரத்தில்.  “வெறுமனே மொழிப் போராட்டம் மட்டுமே நடத்தாமல் பண்பாடு மற்றும் இனப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறும்போது தான் அடிமை விலங்கு உடையும்” என்றார் தந்தை பெரியார்.
தீண்டாமையை முழுவதும் ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட தந்தை பெரியாரின் சிலைகளையும், அவரது சமூக நல்லிணக்க கருத்துகளையும் அகற்றிவிட்டு மீண்டும் பாசிச கருத்துகளைத் தமிழகத்தில் புகுத்திட நினைக்கும் ராஜாவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
நேற்று (5.3.2018) தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “பயங்கரவாதமும், மதவாதமும், இடதுசாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இச்சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புலனாய்வு அமைப்புகளைப் பலப்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களையெடுக்க வேண்டும். அழிவு சக்திகளை கட்டுப்படுத்தி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அனைவரும் செயல்பட வேண்டும்” என உரையாற்றியுள்ளார்.
முதலமைச்சரின் அறிவிப்பு வந்த ஒரே நாளில், நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவித்தும், வெறுப்பை உமிழும் பயங்கரவாதப்  பிரச்சாரத்தை செய்து வன்முறைக்கும், மோதலுக்கும் தொடர்ந்து வழிவகுக்கும்  எச். ராஜாவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply