தனியார்மயத்தை நோக்கி இந்திய இரயில்வே துறை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1160 Views
தனியார்மயத்தை நோக்கி இந்திய இரயில்வே துறை:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
train rush_0
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நாடு முழுவதும் அதிக வருவாய் ஈட்டும் 400 இரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு மாற்றும் வகையில் தனியார் பங்களிப்புடன் மறுமேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அதன் முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய ரயில்வேதுறை என்பது வெற்றிகரமாக இயங்கிவரும் துறையாகும். குறிப்பாக திரு. நிதீஷ் குமார் அதற்குப் பிறகு திரு. லாலுபிரசாத் ஆகியோர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது மிகவும் லாபம் ஈட்டும் துறையாக இரயில்வே துறை இருந்தது. லாபத்தை ஈட்டும் ஒரு அரசுத் துறையைத்  தனியார் மயமாக்குவது என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது.
தனியார் மயமாக்கல் என்பது ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்து வேலைவாய்ப்பைக் குறைக்கும். தனியார் மயமாக்கலினால் சமூகநீதி கொள்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையும் முழுமையாகப் பறிபோகும். மேலும், தனியார் மயமாக்கலால் பயணிகள் கட்டணம் உயரும். இதனால் கிராமபுற மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், ஏழை எளியவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
இரயில்வேத் துறையை தனியார்மயமாக்குவது என்பது இரயில்வேயின் நிர்வாகத் திறமையில் இயலாமையை வெளிக்காட்டுகிறது. அனைத்து அதிகாரங்களையும், பணியாளர் பலத்தையும் முழுவதுமாகப் பெற்றுள்ள ஒரு அரசுத் துறை சிறப்பாக இயங்க முடியாது என்றால் தனியார்த் துறையால் இரயில்வேயை சிறப்பாக எப்படி நடத்த முடியும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
ஏழை எளியவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தனியார் மயமாக்கல் என்ற திட்டம், ஒரே இடத்தில் அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும் குவிப்பதற்கான செயலாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
 இந்திய நாட்டில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கலாமே தவிர அரசு நிறுவனங்களை சிறிது சிறிதாக தனியாரிடம் ஒப்படைப்பது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே மத்திய பாஜக அரசு இதுபோன்ற பொதுநலனுக்கு எதிரான மக்கள் விரோத திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map