தனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!

2244 Views
தனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: 
தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!
maxresdefault
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்ச் சிறுகதை உலகின் தனித்துவமிக்க படைப்பாளரான பிரபஞ்சனின் மறைவுச் செய்தி அறிந்து மனவேதனை அடைந்தோம். இது தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.
சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பிரபஞ்சனின் எழுத்துகள், மனிதத்தை வளர்த்தெடுக்கும் மகத்தான இலக்கியப் படைப்புகள் என்றால் மிகையில்லை. கரந்தைக் கல்லூரிகளில் தமிழ் பயின்ற பிரபஞ்சன், பழந்தமிழ் இலக்கியங்களிலும், நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த பரிச்சயமுடையவர். தனது இலக்கிய ஆற்றலை மனிதகுல மேம்பாட்டிற்குப் பயன்படுத்தியவர்.
ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொணடு அவர் எழுதி 1995ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘வானம் வசப்படும்’ புதினம், அவரது இலக்கியச் சாதனைகளில் ஒன்று. ‘கருணையினால்தான்’ என்ற சிறுகதை மூலம் காவல்துறை, அப்பாவிகள் மீது நிகழ்த்தும் சித்ரவதைக் கொடுமைகளை அம்பலப்படுத்தியவர். ‘சைக்கிள்’ என்ற சிறுகதையின் மூலம் அந்நியப் பண்பாட்டிற்கு அடிமையாகும் அவலம் குறித்து எச்சரித்தவர். ‘நேற்று மனிதர்கள்’ என்ற சிறுகதையின் மூலம் ஆணவப் படுகொலை செய்யும் வக்கிர உள்ளங்களை வன்மையாகக் கண்டித்தவர்.
இலட்சக்கணக்கான வாசகர்களின் பற்றுக்குரிய பிரபஞ்சன், புற்று நோயால் தனது இறுதி காலங்களில் துன்புற்றுள்ளது வேதனைக்குரியது.
மாபெரும் மனிதநேயர், மகத்தான படைப்பாளி, எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது எழுத்துகள் அவரது புகழை எனறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply