தங்கச்சிமடம் மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் படுகொலை: பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும்!

2661 Views
தங்கச்சிமடம் மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் படுகொலை: பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும்!
fishermen4-07-1488856931
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது மீனவர் பிரிட்சோவை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சூட்டு படுகொலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொலையுண்ட பிரிட்சோவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
2011 ஏப்ரல் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. அப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 4 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். இதன் பிறகு முதன் முறையாக திரு. நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய மீனவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ள பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
2014 ஜனவரி 31 அன்று தங்கச்சிமடத்தில் பாஜக சார்பாக நடைபெற்ற  கடல் தாமரை போராட்டத்தில் பங்குக் கொண்டு பேசிய திருமதி சுஸ்மா சுவராஜ் (அன்றைய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இன்றைய வெறியுறவுத் துறை அமைச்சர்) தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரந்தர தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது இராமநாதபுரத்தில் ஏப்ரல் 17 2014ல் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திரு. நரேந்திர மோடி தான் குஜராத்தைச் சேர்ந்தவன் என்றும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என்று பேசினார்.
மீனவர்களுக்காக பாஜக தலைவர்கள் பேசியவை அனைத்தும் வெறும் வார்த்தை ஜாலங்கள் தான் என்பதை தான் பாதியளவு ஆயுளை முடித்துவிட்ட மோடி அரசின் நடவடிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகாட்டுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடாகவே மீனவர் பிரிட்சோவின் கொலை அமைந்துள்ளது.
திரு. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்ட ஒரு படகை கூட அவரால் மீட்க முடியவில்லை. எங்கள் வசம் 130 இந்திய மீனவர்களின் படகுகள் உள்ளன, அவற்றை விடுவிக்க மாட்டோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திமீராக பேசிவருகிறார்.
தன்னை வலிமையான பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியினால் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இயலாத சூழலில் அதன் உச்சமாக இன்று ஒரு மீனவரின் உயிரை நாம் பலிக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மீனவர் பிரட்சோவின் கொலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளபடி மத்திய அரசு அவரது குடும்பத்தினருக்கு ரூ1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசின் வேலையும் கொடுக்க வேண்டும்.
மீனவர் பிரட்சோவின் உயிரிழப்பை ஒரு கொலை வழக்காக பதிவுச் செய்வதற்கு உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் நலனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசிற்கு உண்மையான அக்கறை வரும் வரையில் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாது.
எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply