டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் மரணம்: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2554 Views
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் மரணம்:
உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
muthu
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
டெல்லி ஜவாஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலைக்கழகத்தில் எம்.பில். பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மனஉறுதியுடனும், போராட்டக் குணத்தோடும் வளர்ந்த முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
“பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.ஹெச்டி மாணவர்களில் சிலர் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர். இந்தப் படிப்புகளின் சேர்க்கைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது; வாய்மொழித் தேர்வில் (வைவா) பாரபட்சம் காட்டப்படுகிறது; சமத்துவம் மறுக்கப்படுகிறது’ என முத்துகிருஷ்ணன் தனது முகநு£லில் பதிவிட்ட ஒரு நாளைக்குப் பின்பு இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
இதேபோன்று பாரபட்சமாக நடத்தப்பட்டதால் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் தலித் மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலைச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்கள் போராட்டமும் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. ரோகித் வெமூலாவிற்கு நீதிகேட்டு இயங்கிவரும் போராட்டக் குழுவில் வீரியமாகப் பங்கேற்றவர் முத்துகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஜே.என்.யூ. மாணவர் நஜீப் அஹ்மது காணாமல் போனார். அவரது கதி என்னவென்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. தற்போது மீண்டும் சமநீதி மறுக்கப்பட்டதால் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.
ஜே.என்.யூ. வளாகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இச்சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply