1645 Views
டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
யூனியன் பிரதேசமான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்களும், முரண்பாடுகளும் நிலவிவந்த நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது என விளக்கக்கோரி கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லியில் துணைநிலை ஆளுநருக்குத்தான் அதிக அதிகாரம் என தீர்ப்பளித்தது. டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசால் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பெரிதும் வரவேற்பிற்குரியதாகவும், அதிகார மமதையில் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் மத்திய அரசின் ஆளுநர்களுக்கு சரியான சம்மட்டி அடியாகும் உள்ளது.
உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தனது தீர்ப்பில் மத்திய மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவத்தின் படி செயல்பட வேண்டும் எனவும், மாநில அரசின் சட்ட அதிகாரங்களில் மத்திய அரசு தலையீடக் கூடாது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை- போன்ற உத்தரவுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் ஆளுநர்களுக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பு டெல்லி துணைநிலை ஆளுநருக்கு மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருந்தும் என்பதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கவனத்தில் கொண்டு தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி