ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெறவும், பீட்டாவை தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

1976 Views
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெறவும், பீட்டாவை தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
jalli
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஆட்சியாளர்களை அதிரவைக்கும் நிலைகுலையாத போராட்டத்தை தமிழக இளம் தலைமுறையினர் கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு பெரிதும் காரணமாக இருக்கும் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகின்றது.
தொடச்சியாக காவேரி, முல்லைப் பெரியாறு, நீட் நுழைவுத்தேர்வு,  ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக தமிழக இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்ட களம் கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் தெளிவாக உணர்ந்து அவர்கள் களம் கண்டுள்ளனர்.
நாட்டு மாடுகளை முற்றிலுமாக அழித்துவிட்டு மரபணுமாற்றம் மூலம் உருவாக்கப்படும் மாடுகளை அதிகரித்து கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளை லாபம் பெறவே ஜல்லிக்கட்டிற்கு பீட்டா தடை வாங்கியிருக்கின்றது என்ற உண்மையை தமிழக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர். பீட்டாவிற்கு  மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தமிழகத்தில் ராதா ராஜன் உள்ளிட்ட பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புரவலர்களாக உள்ளார்கள் என்பதை தமிழக இளம் தலைமுறை நன்றாக உணர்ந்துள்ளது.
பீட்டா அமைப்பு, விலங்குகளில் நலனில் அக்கறை உள்ள அமைப்பாக வெளியில் சொல்லிக்கொண்டிருந்தாலும் பல்வேறு நாடுகளின் பல விலங்குகளை கொன்று குவித்துள்ள அமைப்பு அது என்பதையும், இளம் தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள். பல நாடுகளில் பீட்டாவின் செயற்பாட்டாளர்கள் விலங்குகளைக் கொன்று குவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள்.
இந்த உண்மைகளையெல்லாம் நன்கு அறிந்து புரிந்து இன்று சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாகப் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, வரவேற்கத்தக்கது.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகமெங்கும் ஜனநாயக ரீதியில் போராடிவரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தடியடி நடத்தி கலைக்க முயல்வதும், கைது செய்வதும் கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களின் உணர்வுகளின் வடிவமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து தமிழக முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் பிரதிநிதிளுடன் உடனே பேச்சு வார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்தப்படுவதற்கு வழிவகுக்க வேண்டும். மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply