ஜனநாயகத்தின் முதல் தூணான சட்டமன்ற பேரவையின் வளாகத்தில் நான்காம் தூணான ஊடகங்களுக்கு கெடுபிடி! மமக கண்டனம்!

1818 Views
ஜனநாயகத்தின் முதல் தூணான சட்டமன்ற பேரவையின் வளாகத்தில் நான்காம் தூணான ஊடகங்களுக்கு கெடுபிடி -மமக கண்டனம்!
tamilnadu secretariat
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மற்றும் அதன் வளாகத்தில் ஆண்டாண்டுகாலமாக செய்திகளைச் சேகரிக்க செய்தியாளர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான போது சட்டமன்ற பேரவைக்குள் சென்று செய்திகளை செய்தியாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
கடந்த 22.08.2016 அன்று வழக்கமாக பேரவையின் 4வது வாயில் முன் நின்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு அனுப்பட்டனர்.  வழக்கமாக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் பத்திரிகையாளர் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை; சட்டமன்ற உறுப்பினர்களை வழக்கமாக பேட்டியெடுக்கும் இடங்களிலும் பேட்டி எடுக்கவோ, நேரலைக்கு உதவிடும் ஒளிப்பதிவு கருவிகளைப் பொருத்தவோ அனுமதிக்கப்படவில்லை. மேலும் தலைமைச்செயலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறைக்கு செல்லும் வாயிலும் அடைக்கப்பட்டு செய்தியாளர்களைச் செய்தி சேகரிக்க விடாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட, வீடியோ ஊடகவியலாளர்கள் தமது  செய்தி சேகரிப்பு கடமையை ஆற்ற இயலாமல் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர், அவசரகால நிலையில் நடைபெறுவது போன்று ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்கும் ஊடகத்தை சேர்ந்தவர்களின் உரிமைகளை ஜனநாயகத்தின் முதல் தூணாக விளங்கும் சட்டமன்றத்தின் வளாகத்திலேயே அதிமுக அரசு நசுக்கியிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கெடுபிடிகளையும் நெருக்கடிகளையும் கொடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உடனடியாக தமிழக அரசு சட்டமன்ற வளாகத்தில் பறிக்கப்பட்ட செய்தியாளர்களின் உரிமைகளை திரும்ப அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply