சோராபுதீன் போலி என்கவுண்டரில் குற்றவாளிகள் விடுவிப்பு: ஏமாற்றமளிக்கிறது நீதியைக் கேலி செய்யும் தீர்ப்பு!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஷொராபுத்தீன், கவுசரபீ,துளசிராம் பிரஜாபதி, போலி என்கவுண்டர் வழக்கில் 22 பேரும் விடுவிக்கப்பட்டது பெரும் ஏமாற்றமளிக்கிறது. இது நீதியைக் கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். ஜே. சர்மா தமது 500 பக்க தீர்ப்புரையில் அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் துரதிர்ஷ்டவசமாக மூன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டும் குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்காததால் விடுவிப்பதாகத் தெரிவித்தார்
அரசு தரப்பு உறுதியான ஆதாரங்களைத் தரவில்லை கொலையுண்ட மூன்று பேரின் குடும்பங்களுக்கும் அனுதாபத்தைத் தெரிவித்து தமக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்திருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது
சிபி ஐ விசாரித்த 210 சாட்சிகளில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். முக்கிய சாட்சிகள் குற்றவாளிகளால் அச்சுறுத்தப்பட்டனர். நாட்டின் மிக உயர்ந்த இடத்தில் ஆளும் கட்சியின் தேசிய தலைவரின் கண்ணசைவில் இது போன்ற காரியங்கள் நடந்தேறியுள்ளதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள் அமித்ஷாவை நீதிமன்றத்தில் நேர் நிற்குமாறு சம்மன் வழங்கிய சிபி ஐ நீதிமன்ற நீதிபதி ஜெ. டி. உத்பத் 2014 மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கும், பின்னர் அந்தப் பொறுப்பினை ஏற்ற நீதிபதி லோயா நாக்பூரில் மர்ம மரணம் அடைந்ததற்கும், லோயாவை தொடர்ந்து நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம் வி கோசவி சிபிஐ குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்ததற்கும் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் விடுவிக்கப்பட்டதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.
22பேர் விடுவிக்கப்பட்ட 20-12-2018 அன்று ஷொராபுத்தீன் ஷேய்க் வழக்கை முதன்முதலில் புலனாய்வு செய்தவரும் அந்த வழக்கின் முக்கிய புள்ளியான டிஜி வன்சாராவை கைது செய்தவருமான குஜராத்தைச் சேர்ந்த ஐபி எஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் உள்துறை அமைச்சகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் ஆளும் பாஜக இந்த வழக்கின் விசாரணையில் வெளிப்படையாகத் தலையிட்டுள்ளதை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன.
ஷொராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கிற்கு குஜராத் மாநிலத்தில் நீதி கிடைக்காது என்பதால் மராட்டிய மாநிலத்திற்கு அன்று மாற்றப்பட்டது தற்போது ஏமாற்றமளிக்கும் இந்தத் தீர்ப்பினால் சி பி ஐ நிச்சயம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும். தேவையெனில் பாஜக ஆளும் மராட்டிய மாநிலத்தை விட்டு மற்றொரு மாநிலத்திற்கு வழக்கினை மாற்ற ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி