சென்னை பல்கலைக்கழகம் உட்பட தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

2616 Views

சென்னை பல்கலைக்கழகம் உட்பட தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

mhj 1

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களைச் சார்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்கது சென்னைப் பல்கலைக்கழகம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. அதேபோல் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பணியிடமும் காலியாக உள்ளது. இந்நிலையில் வரும் 13.03.2017 முதல் பல்கலைக் கழக பதிவாளர் ஒய்வு பெறும் சூழலில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இல்லாத அதாவது தலையில்லாத நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாததால் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் விரக்தியில் உள்ளனர். 159 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தில் இதுபோன்ற ஒரு அவலநிலை மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

அதேபோல் தமிழகத்தில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை, மீன்வள பல்கலையில் துணைவேந்தர், ஆசிரியர் கல்வியியல் பல்கலை, பாரதியார் பல்கலையில், பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளன. திருவள்ளுவர் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதேபோன்ற நிலை நீடித்தால் தரமான உயர்கல்வி தமிழகத்தில் பெறமுடியாது என்ற நிலை உருவாகிவிடும் என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனே நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Leave a Reply