சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து; உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவும், பாஜகவும் விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதைப் பறைசாற்றுகிறது!

1622 Views
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து; உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவும், பாஜகவும் விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதைப் பறைசாற்றுகிறது!
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
பத்தாயிரம் கோடி செலவில் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்கான திட்டத்திற்காக தமிழக அரசு பல்லாயிரணக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியும், ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியும் நடைமுறைப்படுத்தவிருந்தது.
இந்த திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவியதால் அத்திட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் திரு. சுந்தர்ராஜன் உட்பட பலர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இவ்வழக்கில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், எட்டு வழிச் சாலைக்காக நிலம் கையப்படுத்தியது தவறு என்றும், அது செல்லாது என்றும், அந்த திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும், இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் உடனே ஒப்படைத்து அதற்காக ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை வருவாய்த் துறையின் மூலம் எட்டு வாரங்களில் மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலைகளை அமைத்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?” என நீதிபதிகள் தமது தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் விவசாயிகளின் வாழ்வுரிமையை நசுக்கும் வகையில் செயல்படுகின்றன என்பதைப் பறைச்சாற்றுகிறது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய 8 வழிச்சாலை தேவையில்லாதது. மக்களுக்கு பயனில்லாமல் வேளாண்மையை அழிக்கும் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் சமூக அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவரும் நிலையில் இந்தத் தீர்ப்பு பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது.
மத்திய-மாநில அரசுகள் வளர்ச்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கி விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்  உடனடியாகக் கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply