சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் நச்சுகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

2201 Views
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் நச்சுகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
Daily_News_7623668909073
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் நுண் பிளாஸ்டிக் பெருமளவு கலந்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட புழல் ஏரி நீரில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கன செண்டிமீட்டருக்கு 27 துகள்கள் நுண்பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மக்கள் பல்வேறு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களிலிருந்து தற்காக்க புழல் ஏரியிலிருந்து எடுத்து வினியோகிக்கப்படும் சென்னைக் குடிநீரை காய்ச்சி அருந்துகின்றனர். குடிநீர் காய்ச்சி அருந்தும் போது, வெப்பநிலையில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் உருகி டையாக்சின் என்ற நச்சுப் பொருள்கள் உருவாகிக் காய்ச்சப்பட்ட குடிநீரில்  கலந்து விடுகிறது. இதனால் காய்ச்சப்பட்ட தண்ணீரைக் குடிக்கும் போது, அதனுடன் கலந்து டையாக்சின் நச்சும் பொதுமக்களின் உடலுக்குள் சென்று நோய்களை உண்டாக்குகின்றது.
புழல் ஏரி அருகில் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக்கால் உருவான பொருட்கள் தான் புழல் ஏரி நீரில் நுண்பிளாஸ்டிக் கலக்க முக்கியக் காரணமாக இருப்பதாகத் தெரியவருகிறது.
உலகின் பெரும் பகுதிகளில், மனிதர்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கும் நீர் நோய்க்காரணிகளால் மாசுபட்டுள்ளது. பல நாடுகளில் இவ்வகை மாசுபட்ட நீரினை அருந்துவது உடல்நலக் கேட்டிற்கும், இறப்புக்கும் காரணமாக அமைகின்றது. தற்போது அதுபோன்ற ஒரு நிலை சென்னை வாழ் மக்களுக்கு உருவாகியுள்ளது என்பது வேதனைக்குரியது.
எனவே, புழல் ஏரியில் நடத்தப்பட்ட ஆய்வைப் போன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற ஏரிகளான பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் ஆய்வைத் தமிழக அரசே நடத்தி அதில் உள்ள நச்சுகளை உடனே அகற்ற நடவடிக்கை வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply