சுதந்திரத்தின் நற்பலன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய அனைவரும் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோம்!

2242 Views
சுதந்திரத்தின் நற்பலன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய அனைவரும் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோம்!
22853133_1607139562676572_5539068324807528645_n
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் விடுதலைத் திருநாள்  வாழ்த்துச் செய்தி:

நமது நாட்டின் 72வது விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த திருநாளில் அந்நியரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாதி, மத, மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஓரணியில் நின்று வீரதீர போராட்டங்கள் நடத்தி நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க வழிவகுத்த விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரையும் நெஞ்சார நினைவு கூர்வோம்.

இந்த விடுதலைத் திருநாளில் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் விடுதலையின் வசந்தத்தை அனுபவிக்கும் நிலை உள்ளதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்வது மிக அவசியமாகும்.

விடுதலைப் பெற்ற இந்தியா நிச்சயம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்பதில் மாற்று கருத்தில்லை. நாட்டின் உணவு உற்பத்தி சாதனை அளவாக 2016-2017ல் 27.33 கோடி டன் அளவிற்கு உயர்ந்துள்ளது. நமது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 23 கோடி டன் உணவு போதுமானது. தேவையை விட அதிகமாக நாம் உணவு உற்பத்தி செய்தாலும் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்த வண்ணம் நடைபெறுகின்றன. 19 கோடி இந்தியர்கள் ஊட்டச் சத்து குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியில் கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் விடுதலைப் பெற்ற ஜனநாயக நாட்டில் இன்னும் அதே வடிவத்தில் அல்லது புதிய வடிவத்தில் மத்திய மாநில ஆட்சியாளர்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தங்கள் நில உரிமைக்காக, தூய்மையான காற்று, குடிநீருக்காகப் போராடும் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை அவ்வப்போது ஆங்கிலேயர் ஆட்சியை நினைவுபடுத்துவதோடு பெரும் துயரத்தையும் அளிக்கிறது.

ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுதலைப் போர் புரிந்து விடுதலைப் பெற்றோம். இன்று பல கிழக்கிந்திய கம்பெனிகள், பெரு முதலாளிய நிறுவனங்கள் மக்களைச் சுரண்டுவதும் நாம் பெற்ற சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இவையெல்லாம் நமக்கு மிகுந்த வருத்தங்களைத் தந்தாலும் ஒரு ஜனநாயக சோசலிச குடியரசாக நமது நாடு தொடர்ந்து சுடர்வீசுகிறது. இடைப்பட்ட காலத்தில் சோதனைகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தின் நற்பலன் சென்றடைய அனைவரும் பாடுபட இந்த சிறப்பான நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

கருத்துச் சுதந்திரம், சுற்றுச் சூழல், தூய்மையை காக்கும் சுதந்திரம், பெரும் முதலாளித்துவ வணிக அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் முதலியவற்றை அனைத்து மக்களும் அனுபவிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் அரசமைப்புச் சட்டம் காட்டும் வழியில் சளைக்காமல் உழைக்க இந்த திருநாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply