சீமான் மீது தேசத் துரோக வழக்கு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

268 Views

சீமான் மீது தேசத் துரோக வழக்கு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை குனியத்தூர் காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் முதல் சி.ஏ.ஏ. என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக சென்னை, மதுரை, கோவை என தமிழகமெங்கும் ஷாஹின்பாக் பாணியில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை ஆற்றுப்பாலம் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராகவும், சட்டத்திற்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவு செய்ததாகக் கோவை குனியத்தூர் காவல்துறை சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காரணத்தினால் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது வேடிக்கையானது.

போராட்டம் நடந்து முடிந்து 75 நாட்களாகிய பிறகு யாருடைய நிர்ப்பந்தத்தால் தற்போது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?என்பதையும் இதுநாள் வரை பொறுமைகாத்து தற்போது வழக்குப் பதிய வேண்டியதின் அவசியம் என்ன என்பதையும் தமிழக அரசு விளக்க வேண்டும். மத்திய பாஜக அரசு டெல்லியில் சிஏஏக்கு எதிராகப் போராடிய மாணவர் தலைவர்கள் மீரான் ஹைதர், சபூரா ஜர்கர், உமர் காலித், காலித் சைபி முதலியோர் மீது கொடும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) அடிப்படையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதே அடிப்படையில் பாஜகவின் உத்தரவினால் சிஏஏ முதலிய கருப்பு திட்டங்களுக்கு எதிராகக் களம் கண்ட சீமான் மீது தேசத் துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
அரசிற்கு எதிராக விமர்சனங்களை எழுப்புவோர் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்து அவர்களை முடக்க நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.
எனவே, சீமான் மீது பதியப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map