சவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை

1218 Views
சவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக, இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்படி யு.ஏ.இ., கத்தார், ஓமன் , குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், அமெரிக்கா; பிரிட்டன் வங்காள தேசம்; பிலிப்பைன்ஸ்; மலேசியா; சிங்கப்பூரிலிருந்தும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். முதல் இரண்டு வார அட்டவணை வெளியானதில், சவூதியிலுள்ள தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை கொள்கின்றனர்.

முதல் வாரத்தில் மொத்தம் 64 சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் 25 சேவைகள் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் இவற்றில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு வெறும் 4 சேவைகள் மட்டுமே. அவையும் யு.ஏ.இ., ஓமன் , குவைத் ஆகிய நாடுகளுக்கானவையே. சவூதி; பஹ்ரைன்; கத்தார் நாடுகளில் வாழும் தமிழர்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சவூதியிலிருந்து மூன்று விமானங்கள் கேரளாவிற்கும்; இரண்டு சேவைகள் டில்லிக்குமாக திட்டமிடப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவின் பல பகுதிகளிலிருந்தும் தாயகம் திரும்ப ஆயிரக்கணக்கான தமிழர்கள் விண்ணப்பித்திருந்தும், ஒரு சேவை கூட ஒதுக்கப்படாதது சவூதி வாழ் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

இரண்டாம் வாரத்தில் அதிகபட்சமாக 109 சேவைகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், சவூதிக்காக இயக்கப்படவுள்ளது வெறும் 6 சேவைகள் மட்டுமே. அவை எந்தெந்த நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது எனும் விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், சவூதியிலிருந்து தமிழகம் திரும்ப பதிவு செய்துள்ள கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள், சுற்றுலா விசாவில் சென்றவர்கள், வேலை இழந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இருந்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏன் தமிழக விமான நிலையங்கள் பட்டியலிடப்படவில்லை எனும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

தமிழக முதல்வர் இது விஷயத்தில், மத்திய அரசை நிர்பந்தித்து சவூதியில் தவிக்கும் தமிழக மக்கள் தாயகம் திரும்ப தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001

Leave a Reply