சர்வாதிகாரத்தை நோக்கி எடப்பாடி அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1992 Views
சர்வாதிகாரத்தை நோக்கி எடப்பாடி அரசு:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
22688113_1194579960686576_5440787670266251932_n
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டி வருகின்றன.
இன்று மனிதநேய மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகி நவாஸ் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு பொறுப்புக்குழு பொறுப்பாளர் ராஜபாண்டி ஆகியோர் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பை எதிர்த்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய விளைநிலங்களைப் பெரிதும் பாதிக்கும் இந்தக் குழாய் பதிப்பை எதிர்த்தவர்களைக் கைது செய்துள்ள தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுமட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 300க்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினரைக் கைது செய்து ரிமான்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ஜனநாயக முறைப்படி எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, போராட்டங்களை ஒருங்கிணைப்பவர்கள் மீது கொடிய சட்டங்களின் மூலம் அவர்களைச் சிறையில் அடைத்து அவர்களின் குரல்வலையை நசுக்குவது போன்ற கொடுஞ்செயலை எடப்பாடி தலைமையிலான அரசு செய்துவருகிறது.
இதுபோன்ற கொடூர கொடுங்கோல் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்தால் தமிழக மக்கள் எடப்பாடி அரசிற்குச் சரியான பாடத்தை விரைவில் புகட்டுவார்கள்.
மீத்தேன், நியூட்ரினோ, பாறை எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகரமான திட்டங்களை மக்கள் வாழ்விடங்களில் திணிப்பது, மக்களின் வாழ்வாதாரத்தை நீர்முலப்படுத்தும் நடவடிக்கையை எதிர்ப்பவர்களைத் தேசத் துரோகிகள், சமூகவிரோதிகள் என முத்திரைக் குத்தி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை போன்றவற்றை எடப்பாடி அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டில் பல்வேறு கொடூர ஆட்சியாளர் தனது சர்வாதிகார செயல்களால் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போனதுதான் வரலாறு என்பதை எடப்பாடி தலைமையிலான அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply