கோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் தமிழகத்தை ஏமாற்றும் மத்திய அரசு!

1346 Views
கோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர்
தமிழகத்தை ஏமாற்றும் மத்திய அரசு!
mhj1 (2)
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக கோதாவரி ஆற்றிலிருந்து இரும்புக் குழாய் வழியாக தமிழகத்திற்கு நீர் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
இந்த திட்டத்தால் தமிழகம் மற்றும்  அண்டை மாநிலங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீராது. ஏனெனில் இந்த திட்டத்தில் சுமார் 300 டி.எம்.சி. நீர் கோதாவரியிலிருந்து பெறப்பட்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதிக்கு நீரை கொண்டுவந்து அதன்பின்பு சோசீலா அணைக்கு கொண்டு செல்லப்படும், சோசீலா அணையிலிருந்து 100 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் பயன்படுத்த காவிரியில் விடப்படும் என்று இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு சென்னை குடிநீருக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கிருஷ்ணாவிலிருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கும் ஆந்திரப்பிரதேச அரசுக்குமிடையே 1977இல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டப்படி 12 டி.எம்.சி. தண்ணீர் வரவில்லை. அதிக அளவாக ஓராண்டிற்கு 3.5 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்திருக்கிறது.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி நீரைப் பெறுவது என்பது சாத்தியமில்லாதது. அதேபோல் கர்நாடக மாநிலத்திலிருந்து நீரைப் பெற தமிழகம் தொடர்ந்து போராடி வருகிறது என்பதும் ஊரறிந்த உண்மை.
உச்சநீதிமன்ற அறிவுரை வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திராணியில்லாத மத்திய அரசு, கோதாவரி நீரை தமிழகத்திற்கு அளிக்கும் என கூறியிருப்பது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது.
எனவே, கோதாவரி நீர் போன்ற மாயாஜால திட்டங்களால் தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு பதிலாக காவிரி நிதிநீர் பங்கீட்டில் தமிழக உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map