கொங்கு மண்டல திமுக மாநாடு: திமுக செயல் தலைவருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!

2542 Views
கொங்கு மண்டல திமுக மாநாடு:
திமுக செயல் தலைவருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!
DMK-Conference
(கடந்த மார்ச் 24, 25 ஆகிய இரு தினங்கள் ஈரோட்டில் நடைபெற்ற திமுக கொங்கு மண்டல மாநாடு குறித்து திமுக செயல் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் கடிதம் எழுதியுள்ளார்)
  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொங்கு மண்டலம் சார்பாக நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு மிகப் பிரம்மாண்டமாகவும், வெகு சிறப்பாகவும், கொள்கை உறுதியுடனும் நடைபெற்று முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
லட்சோப லட்ச மக்கள் கூடிய இந்த மாநாட்டில் தாங்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரை, மத்தியில் ஆளும் மதவெறி பாஜக அரசிற்கு விடுக்கப்பட்டிருக்க எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. வடமாநிலங்களைப் போன்று மக்களிடம் மதவெறியை ஊட்டி மதக்கலவரங்களையும், வன்முறைகளையும் தூண்டி ஆட்சியைப் பிடித்தது போல் தமிழகத்திலும் வெறுப்பு பேச்சுக்களைப் பேசி, தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தி, மத வன்முறைகளைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என நினைத்துள்ள பாசிச சக்திகளுக்கு “தமிழகத்தில் மதவாதத்தை திமுக ஒருபோதும் நுழையவிடாது” என்ற உங்களின் உரை ஒரு சம்மட்டி அடியாகவே அமைந்துள்ளது.
ஆட்சியையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசிடம் மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த மக்கள் விரோத அரசிற்குப் புரியும் வகையில் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மத்திய மாநில கூட்டாட்சித் தத்துவத்திற்கும் ஊறுவிளைவித்து, ‘ஒற்றைக் காலச்சாரம், ஒற்றை மொழி, ஒற்றை மதம்’ என்ற  கொள்கையைத் திணித்து மத வன்முறைகள் இல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மத வன்முறையைத் தூண்ட நினைக்கும் சங்பரிவாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக “மத்திய பாஜக அரசின் மதவாதம் மற்றும் மொழித் திணிப்பைத் தடுத்து நிறுத்த திமுக உறுதியோடு போராடும்” என்ற  தீர்மானமும்,
தந்தை பெரியார் சிலை அவமதிப்பிற்கு எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் போராட்டம், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு போன்ற தீர்மானங்களும்,
  ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகரமான திட்டங்களுக்காக டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவதை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானமும்,
கெயில் திட்டத்தால் விவசாயத்திற்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்களை இம்மாநாடு நிறைவேற்றியுள்ளது பாராட்டத்தக்கது; வரவேற்புக்கு உரியது.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தமிழக அரசு மத்திய அரசிற்குக் கொடுக்க வேண்டிய அழுத்தங்களை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து திமுகவும், எதிர்க்கட்சித் தலைவரான தாங்களும் கொடுத்துவருவது திமுகவிற்கும், உங்களுக்கும் தமிழ்நாட்டின் மீதும் தமிழக மக்கள் நலனின் மீதும் உள்ள அக்கறை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், மாநாட்டின் நோக்கமும் வெற்றியடைவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காக்கவும், வளமான தமிழகத்தை வளர்த்தெடுக்கவும் மனிதநேய மக்கள் கட்சி திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
Leave a Reply