கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்!

2544 Views

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்:
நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கூடங்குளம் அணு உலை தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மீது தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 2 அன்று அளித்த தீர்ப்பில் ஏப்ரல் 30, 2022 தேதிக்குள் AFR (Away From Reactor) எனும் ‘அணுஉலைக்கு அப்பால் அணுக்கழிவுகளின் கிட்டங்கி கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால் இந்திய அணுசக்திக் கழகம், “அணுஉலையைச் சேமிக்கும் தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை” என்று பிராமண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மீண்டும் 5 ஆண்டுகால அவகாசம் கோரியது.

தற்போது அணுஉலை இருக்கும் பகுதியிலேயே அந்த அணுக் கழிவுகளை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்த்திருப்பது கண்டனத்திற்குரியது. இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க மேலை நாடுகளில்  பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலை கருவூலம்” (Deep Geological Repository)  அமைப்பதற்கான தொழில்நுட்பம் இன்றுவரை நமது நாட்டில் இல்லாத நிலையில் Away From Reactor -அணுஉலைக்கு அப்பால் அணுக்கழிவு கிட்டங்கி போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளைக் கையாளும் நடவடிக்கையை எடுத்திருப்பது மிகப்பெரிய ஆபத்தை அப்பகுதியில் உருவாக்கும்.

அணுக்கழிவு மையத்தில்தான் பல டன் எடை கொண்ட அணுக்கழிவுகள் சேமிக்கப்படும். அதனைக் குளிர்வித்துக் கொண்டே இருக்க வேண்டும். குளிர்விப்பதை நிறுத்திவிட்டால், அது பேராபத்தை உருவாக்கும். மேலும் இந்த அணுக்கழிவுகளில் உள்ள சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்கக் குறைந்தது 30 ஆண்டுகள் தேவைப்படும். அதேபோல் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். அந்த 24,000 ஆண்டுகளில் அணுக்கழிவு மையத்தை எந்த ஒரு புயல், பெருமழை வெள்ளம், பூகம்பம் போன்றவற்றைச் சந்திக்காமல் பாதுகாப்பாக வைப்பது சாத்தியமற்றது.

கூடங்குளம் அணுஉலை வளாகம் 5.40 கி.மீ. நீளமும், 2.5 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த 13.5 சதுர கி.மீ. பரப்பில் ஆறு முதல் எட்டு அணுஉலைகள், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலை (reprocessing plant), உப்பகற்றி ஆலைகள் (desalination plants), நிர்வாக அலுவலகங்கள் என அனைத்தையும் சேர்த்து அடர்த்தியாகக் கட்டுவது மிகவும் ஆபத்தானது.

1-2 அணுஉலைகளுக்கும் 3-4 அணுஉலைகளுக்கும் இடையே வெறும் 804 மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. அதேபோல, 3-4 அணுஉலைகளுக்கும் 5-6 அணுஉலைகளுக்கும் இடையே அதைவிடக் குறைவாக 344 மீட்டர் தூரம்தான் உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் AFR (Away From Reactor) எனும் ‘அணுஉலைக்கு அப்பால் அணுக்கழிவிற்கான கிட்டங்கி’ எனும் அமைப்பை இதே வளாகத்தில் கட்ட முடிவெடுத்திருப்பது மிகவும் ஆபத்தானது. இது உள்ளூர் மக்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் பெரும் கேடுகளை, ஆபத்துக்களை உருவாக்கும்.

கூடங்குளத்தில் தற்போது இயங்கும் இரண்டு அணு உலைகளும் நிரந்தர நோயாளிகளாக உள்ளன. கடந்த நவம்பர் 19, 2018 முதல் மே 19, 2019 ஆறு மாதங்களாக மூடிக்கிடந்த முதல் அணுஉலை ஜூன் 4 முதல் மீண்டும் 48வது முறையாகப் பழுதடைந்து மூடப்பட்டிருக்கிறது. தரமற்ற உதிரிப் பாகங்களால் கட்டமைக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும். இந்த சூழலில் தரமற்ற முறையில் இயங்கி வரும் அணுஉலை வளாகத்தில் அணுக்கழிவுகளையும் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் இல்லாத சூழலில் அணுக்கழிவுகளை அந்த வளாகத்திலேயே சேமிப்பது பேராபத்தாகும்.

எனவே, சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும்  பாதுகாப்பற்ற பேராபத்தை உருவாக்கி தென் தமிழகத்தைச் சுடுகாடாக்கும் இந்த அபாயகரமான திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply