காவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!

1915 Views
காவிரி தீர்ப்பு: தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!
mhj new
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவிரியில் இருந்து தமிழகம் கோரியது 264 டி.எம்.சி. தண்ணீராகும். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பில் தமிழகத்துக்கு 205 டிஎம்சி வழங்க வேண்டும் என கூறப்பட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. எனக் குறைத்தது. தற்போது உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தான் என மீண்டும் குறைக்கப்பட்டு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிலத்தடி நீர் வளத்தைக் கவனத்தில் கொள்வதாகக் கூறிக்கொண்டு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள நீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீரை அதிகரித்தும் ஆணையிடப்பட்டுள்ளது நியாயமானதாக இல்லை.
இதுவரை தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்தவொரு உத்தரவையும் மதிக்காத கர்நாடகத்துக்கு கூடுதல் நீர் என்ற சன்மானத்தையும், உரிமை மறுக்கப்பட்ட தமிழகத்திற்கு நீர் அளவைக் குறைத்து தண்டனையையும் இன்றைய தீர்ப்பு அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நீர் அளவு குறைப்பு என்ற ஆணை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆணை தமிழகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே, வறட்சி, மழை வெள்ளம், புயல் போன்ற காரணங்களால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்குப் பேரிடியாகவே அமைந்துள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்காத எடப்பாடி அரசும் இந்தத் தீர்ப்பிற்கு முக்கியக் காரணியாக உள்ளது. அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்த மத்திய பாஜக அரசின் கர்நாடக சார்பு நடவடிக்கைகள் இந்த அநியாயத் தீர்ப்புக்கு வழிவகுத்துள்ளன.
இந்தத் தீர்ப்பின் பின்னணியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளபடி, தமிழக முதலமைச்சர் விவசாய சங்கங்கள் பங்குகொள்ளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply