காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!

421 Views
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!
22853133_1607139562676572_5539068324807528645_n
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தின் காவிரி டெல்டா நிலப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மற்றொரு இடத்திற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் விடப்பட்ட ஏலத்தின் இரண்டாம் பகுதியாக இந்தத் திட்டம் என்பது ஓஏஎல்பி-2 எனும் பிரிவில் பெரிய நிலப்பகுதியாக அமைந்துள்ளது. காவிரி டெல்டா பகுதியில் 474.19 சதுர கி.மீ. அளவில்  இந்த இடம் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தின் இரண்டு இடங்களை எடுத்தது. இதனால், சுற்றுச்சூழலும், விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனத் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாய அமைப்பினர் ஆகியோர் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இரண்டாவது பகுதியாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடும், விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியத்தை  வறண்டப் பூமியாக மாற்றிடவே இதுபோன்ற திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தின் மீது வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசு மௌனமாக சாதிப்பது வேதனைக்குரியது.
எனவே, ஹைட்ரோ கார்பன் போன்ற மண்ணை மலடாக்கும்  நாசகர திட்டத்தை உடனே மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களின் இந்தக் கோரிக்கைக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை என்றால்  ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மாபெரும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி முன்னெடுத்து நடத்தும் என மத்திய மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply