கர்ப்பிணி மரணத்திற்குக் காரணமான ஆய்வாளரிடமிருந்தே ரூ.25 லட்சம் இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1686 Views
கர்ப்பிணி மரணத்திற்குக் காரணமான ஆய்வாளரிடமிருந்தே ரூ.25 லட்சம் இழப்பீட்டை பெற்றுத் தரவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
kamaraj-admitted-in-hospital_SECVPF
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா, கீழே விழுந்ததில் மற்றொரு வாகனம் அவர் மீது மோதி மரணமடைந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. உஷாவை இழந்து வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பாவி கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள போதும் அவர் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது தெரியப்படுத்தப்படவில்லை, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆய்வாளர் காமராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் இதற்குத் தீர்வாக இருக்காது. காமராஜ் மீது கொலைக் குற்ற வழக்கைப் பதிவு செய்து அவரை உடனே பணியிலிருந்து நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்.
மனிதநேய பணியாக இருக்கக்கூடிய காவலர் பணியை, அதிகார மமதையில் கையாள்வதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது. மனித உயிரின் மாண்புகளைக் காவல்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை காவல் அதிகாரிகளுக்குப் போதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
எனவே, தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க காவல்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும், மரணமடைந்த கர்ப்பிணி உஷாவின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் எனவும் இந்தத் தொகையை குற்றம் புரிந்த ஆய்வாளரிடமே அரசு வசூலிக்க வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply