கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பாஜக புறமுதுகு காட்டி ஓடியது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி!

2279 Views
கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பாஜக புறமுதுகு காட்டி ஓடியது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி!
25552056_1950308651651880_6920024811975477530_n
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை:
இன்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல்  தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கூட பொருட்படுத்தாமல் புறமுதுகு காட்டி வெளியேறியுள்ளார் எடியூரப்பா.
பண பலத்தாலும், அதிகாரத் திமிரினாலும் மக்கள் தீர்ப்பு தம் பக்கம் இல்லாவிட்டாலும் கடந்த பல மாதங்களாக கோவா, மணிப்பூர், பீகார் மற்றும் மேகாலாயா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை புறவழிவாசல் வழியாகக் கைப்பற்றிய மோடி-அமித்ஷா ஜோடி இன்று கர்நாடகத்தில் தனது அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்திய போதும் மண்ணைக் கவ்வியுள்ளது.
கர்நாடக வாக்காளர்களில் 56 விழுக்காட்டினர் பாஜகவை சட்டமன்றத் தேர்தலில் நிராகரித்து விட்ட சூழலில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தலையாட்டி ஆளுநர் மூலம் எடியூரப்பாவை முதலமைச்சராக்கி ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏளனப்படுத்தியது மோடி – அமித்ஷா ஜோடி.
இன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் மோடி -அமித்ஷா ஜோடியின் மாயவலையை முறியடித்துள்ளார்கள். இன்று கர்நாடக சட்டமன்றத்தில் பாஜக புறமுதுகு காட்டி ஓடியது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி இனி தொடர் கதையாகட்டும்.
பாஜக மூட்டிய குதிரை பேரம் என்னும் நெருப்பாற்றைக் கடந்து மதச்சார்பின்மையை நிலைநாட்டிய கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவின் குதிரை பேரத்திற்கு வழிவகுக்காமல் உடனடியாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்திற்கு எமது நன்றி.
மதசார்பின்மையை நிலைநாட்ட, அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்க சரியான முடிவை எடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவகவுடாவிற்கும், கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி இனி வரும் தேர்தல்களிலும் தொடர அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒற்றுமையுடன் ஓர் அணியில் செயல்பட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply