கர்நாடகாவில் பாஜக ஆட்சி: ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் துக்க நாள்!

1828 Views
கர்நாடகாவில் பாஜக ஆட்சி:
ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் துக்க நாள்!
yeddy2
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை:
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை ஓட்டுகளைப் பெறாத நிலையில் ஜனநாயத்தையும், நமது அரசியல் அமைப்பு சட்டத்தையும் சிறுமைப்படுத்தி அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ள இன்றைய தினத்தை ஒரு கறுப்பு தினமாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
மத்திய ஆட்சியில் உள்ளோம் என்ற அதிகார மமதையில் மாநில ஆளுநரைத் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு பெரும்பான்மை கர்நாடக மக்களால் நிராகரிக்கப்பட்ட அம்மாநில பாஜகவிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்.
கர்நாடக மாநிலத்தில் மக்கள் பாஜக ஆட்சியையே விரும்புகின்றனர் என்று வாய்ச்சவடால் விடும் பாஜக, காங்கிரஸ் வாங்கிய ஓட்டுச் சதவீதம் 38 விடக் குறைந்த ஓட்டுச் சதவீதத்தையே பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து 56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர்.
இத்தேர்தலில் 29 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தனது வைப்புத் (டெபாசிட்) தொகைகூட பெற முடியவில்லை. அதேபோல் 14 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று நோட்டாவுடன் போட்டிப் போட்டுள்ளனர்.
இதுபோன்ற சூழலில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளது என்பது ஜனநாயத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரான செயலாகும். நடுநிலையைக் காக்க வேண்டிய ஆளுநர் முழுக்க முழுக்க பாஜக ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்பதற்குச் சிறந்த உதாரணம் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் காலஅவகாசத்தை அளித்தது ஆகும்.
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக பணியாற்றுகிறது என்ற பொய்ப் பிம்பத்தை உருவாக்கி, ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மதிக்காமலும், கர்நாடக மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், மத்திய பாஜக செயல்பட்டு வருவது அது மக்கள் விரோத கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
எனவே, இதுபோன்ற ஜனநாயகப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த நாட்டின் ஜனாதிபதி இவ்விஷயத்தில் தலையிட்டு கர்நாடகாவில் உள்ள  எடியூரப்பாவின் தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும், பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகாவில் ஜனநாயக விரோத பாஜக ஆட்சி தொடர்ந்தால் கர்நாடகாவில் மட்டுமல்ல நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராகப் மக்கள் ஜனநாயக ரீதியான புரட்சிப் போராட்டங்கள் நடத்த தயாராக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply