கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் கடல் பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் இராமநாதபுரம் எம்.எல்.ஏ. நேரில் கோரிக்கை

1456 Views

இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் தனிச் செயலாளர் ஐ. அமீன் அஹமத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இன்று (15.02.2013) மத்திய சூற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திருமதி ஜெயந்தி நடராஜன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கடல் பாசி எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ளத் தடையையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2001-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின் போது கடல் அட்டை ஒரு அழியும் உயிரினம் என்று அதை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் கடல் அட்டையை பிடித்து வந்தார்கள். மேலும் கடல் அட்டை உலகில் வேறு எந்த நாட்டிலும் அழியும் இனம் என்று அறிவிக்கப்படவில்லை, கடல்அட்டை பிடிப்பதற்கு தடையும் விதிக்கப்படவில்லை, கடல் அட்டை மீதான தடை தங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளதாக கோரி கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் என இராமநாதபுரம் மீனவர்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகளில் இராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த மீனவப் பெண்கள் பாரம்பரியமாக பாசி எடுத்து வந்துள்ளார்கள் ஆனால் சூற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பாசி எடுப்பதை வனத்துறையினர் தடுத்துவருகிறார்கள். இதுமட்டுமின்றி பாசி எடுத்தார்கள் என்று குற்றஞ்சாட்டி மீனவப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நீண்டகாலமாக மீனவ பெண்கள் வெறும் கைகளால் பாசி எடுத்து வந்ததை தடை செய்வதின் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் கடல் அட்டை மற்றும் கடல் பாசி தடையின் காரணமாக மேலும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். பல வெளிநாடுகளில் கடல் அட்டைப் பிடிப்பதும் கடல் பாசி எடுப்பதும் நெறிப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் மத்திய அரசு கடல் அட்டை மற்றும் கடல் பாசி மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வில் வளம் சேர்க்கவேண்டும் என்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். கடல் அட்டை தொடர்பான பல ஆய்வுக் குறிப்புகளையும் அவர் அமைச்சரிடம் வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர் இதுகுறித்து தனது அமைச்சகம் ஆய்வு செய்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என்று குறிப்பிட்டார்.

2013-02-15

Leave a Reply