கஜா புயல் பாதிப்புகள்: குடும்பத்திற்கு தலா ரூ.25000 வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

2194 Views
கஜா புயல் பாதிப்புகள்: குடும்பத்திற்கு தலா ரூ.25000 வழங்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
GAJA
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலின் பாதிப்பில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் நிவாரணம் வழங்கும் பணியிலும் அரசுடன் இணைந்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. தமது வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக நாகை மாவட்டம், வேதாரண்யம் முதல் கோடியக்கரை வரை உள்ள பகுதிகளும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கிராம பகுதியில் வாழும்  மக்களுக்கு உணவும், குடிநீரும் கிடைக்காமல் குழந்தைகள் பெண்கள் உட்பட மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமப் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றடையாமல் உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கும், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், மாவட்டங்களின் உட்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடையவில்லை எனவும் புகார்கள் வருகின்றன.

எனவே தமிழக அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அவர்கள்  வாழ்விடத்தை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்குக் குடும்பத்திற்கு தலா ரூ. 25000ஐ தமிழக அரசு நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply