கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

1079 Views

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

12779020_605909589562040_4335975590109871259_o_12283

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சமூக செயல்பாட்டாளரும், ஆவணப்பட இயக்குநருமான திவ்யபாரதி சமீபத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் வேதனைகளையும், அவர்கள் படும் அவஸ்தைகளையும் மையமாகக் கொண்டு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை திரையிட தமிழக அரசு தடைவிதித்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது எடப்பாடி தலைமையிலான மக்கள் விரோத அரசு, அறவழியிலான மாற்றுக்குரல்களை நசுக்கும் அரசு எனும் அவப்பெயரை மீண்டும் பெற்றுள்ளது.

திவ்யபாரதி, கல்லூரிக் காலம் முதல் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் உரிமை, மாணவர்களின் உரிமை என பல போராட்டங்களில் கலந்துகொண்டு உரிமைக் குரல் எழுப்பியவர். கடந்த 2009ஆம் அவர் மாணவியாக இருந்த போது நடைபெற்ற ஒரு போராட்டத்திற்காக அவர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருந்தது. தற்போது 8 ஆண்டுகள் கழித்து அவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அரசிற்கு எதிராக மாற்றுக்கருத்து கொண்டவர்களை ஒடுக்குவதற்கு வேண்டுமென்றே பழைய வழக்குகளை பல ஆண்டுகள் கடந்து தூசி தட்டி எடுத்து அதன் மூலம் கைது, சிறை என மிரட்டுவது ஜனநாயகத்தின் மீது சர்வாதிகாரம் தொடுக்கும் தாக்குதலாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

மாநிலத்தின் பல பகுதிகளில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மீது இத்தகைய கைது நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

அரசியலமைப்புச் சட்டம், ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை மட்டும் வழங்கவில்லை, மக்களுக்கான உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. அதன்படி பொதுமக்கள் தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஜனநாயக முறைப்படி போராடுவதை நசுக்க அரசுக்குத் தார்மிக உரிமை இல்லை என்பதை தமிழக அரசு நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.

எனவே, திவ்யபாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப்பெறவும், அவர் தயாரித்துள்ள கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை திரையிடவும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map