எதிர்க்கட்சி தலைவர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க மமக தலைவர் வேண்டுகோள்!

2311 Views

காவிரி விவகாரம்: 

எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும்

mk-stalin
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திரு.மு.க. ஸ்டாலின் கூட்டவிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நான் பங்குக்கொள்ளவிருக்குறேன்.

காவிரி பிரச்சினை தொடர்பாக  உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் போராட்டங்களும், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்று இரு மாநிலங்களுக்கிடையே செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும்  நிறுத்தப்பட்டன. அத்தகைய நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே தமிழக அரசு கூட்ட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உட்பட தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் என அனைவரும் வலியுறுத்தியும் தமிழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

அரசின் சார்பில் கூட்டவேண்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்புணர்வுடன் கூட்டவிருப்பது வரவேற்கத்தக்கது, கர்நாடகவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் முதலமைச்சர் சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்துக்கட்சியினரும் கலந்துக்கொண்டனர்.  அதேபோல் காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தை புறக்கணிப்போம் என முடிவு செய்திருக்கும் கட்சிகள்
தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

(ஒப்பம்) எம் எச் ஜவாஹிருல்லா

Leave a Reply