எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜக வெற்றிக்கு காரணம்!

1800 Views
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜக வெற்றிக்கு காரணம்!
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழகத்தில் மாபெரும் வெற்றி அளித்த தமிழக வாக்காளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கி திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து, கடுமையாக உழைத்து இந்த வெற்றிக்கு அரும்பாடு பட்டுள்ளார். திமுக தலைவருக்கும் திமுக கூட்டணியில் இடம் பெற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாவிட்டாலும் கட்சி நலனை விட நாட்டு நலனே பெரிது எனக் கருதி திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பாடு பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அளவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு தமிழகத்தில் திமுக தலைமையில் செயல்பட்டது போல் இந்திய அளவில் எதிர்மக்கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தன்முனைப்பை (ஈகோ) புறந்தள்ளி வலுவான கூட்டணியை அமைக்கத் தவறியதுதான் முக்கியக் காரணமாகும்.
கடந்த ஜனவரி 2019ல் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் மாநாடு நடத்தி பாஜகவிற்கு எதிராக ஒன்று சேர்ந்து அரசியல் களத்தில் பாடுபடுவது என்று தீர்மானித்தார்கள். ஆனால் அந்த நிகழ்விற்குப் பிறகு இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்துவதை விட தங்கள் கட்சி நலனையே பெரிதாகக் கருதி அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கத் தவறியது தான் அவர்கள் படுதோல்வியை சந்திக்க நேரிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைத்தது போல் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுவான கூட்டணியை இந்திய அளவில் அமைத்திருந்தால் பாஜகவிற்கு மிகப்பெரும் வெற்றி கிடைத்திருக்காது.

இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் நடுநிலை தவறியதாக செய்யப்பட்ட விமர்சனம் போல் முன்னெப்போதும் செய்யப்பட்டதில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகாத இடங்களில் கண்டெடுக்கப்பட்டதில்லை. இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்ற நம்பிக்கை மக்களிடையே இல்லை. இதுவும் பாஜகவின் பெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது.

பாஜக அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள கட்சிகளுக்கு மிகப்பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது. இனியாவது தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையைப் புறந்தள்ளிவிட்டு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காக்க நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உளமாற ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மை மக்கள் இந்தத் தேர்தல் முடிவுகளைக் கண்டு பீதியடையத் தேவையில்லை. புதிய ஆட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை சிதைக்க முற்பட்டால் அதனை ஜனநாயக ரீதியாக நேச சக்திகளின் உறுதுணையுடன் முறியடிக்க உறுதி எடுத்துக் கொள்வோம்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply