ஊழலுக்கு ஒத்துழைக்காத கல்வித் துறைச் செயலாளரை மாற்ற முனையும் தமிழக அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1894 Views

ஊழலுக்கு ஒத்துழைக்காத கல்வித் துறைச் செயலாளரை மாற்ற முனையும் தமிழக அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

mhj redpix

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திரு. உதயசந்திரன் அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது என தகவல்கள் வெளிவருகின்றன.

ஜெயலலிதா மறைந்த பின்பு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால், பாஜகவின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையிலான தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இச்சூழலில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திரு. உதயசந்திரனை பணியிட மாற்றம் செய்யப்போவதாக வெளிவரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. உதயசந்திரன் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக பதவியேற்று ஒரு சில மாதங்களே ஆனபோதும், படுமோசமாக இருந்த பள்ளிக் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் நற்பெயர் பெற்றவர்.

தமிழகப் பாடத்திட்டங்களை தரம் உயர்த்த சீரிய முயற்சிகளை மேற்கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த உதயசந்திரன் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளார்.

மக்களின் அறியாமையை நீக்கி அறிவைப் பெருக்கி பொதுமக்களுக்கும் அரசிற்கும் பெரும் உதவியாக இருப்பது இந்த பள்ளிக்கல்வித் துறையாகும். இதுபோன்ற ஒரு துறையில் சிறப்பாக செயல்படும் அரசு செயலாளரை ஊழலுக்கு உடன்படவில்லை என பணியிட மாற்றம் செய்ய போவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

திரு. உதயசந்திரனை பள்ளிக்கல்வித் துறையிலிருந்து மாற்றம் செய்வதை தமிழக அரசு கைவிட்டு அவரை எந்தவித நிர்பந்தத்திற்கும் உள்ளாக்காமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply