உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை

2297 Views

17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டை, இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தலமாகவும் விளங்க வைப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலை நோக்குத் திட்டம் 2023 குறிப்பிட்டுள்ளார்கள், அந்தக் கனவை நனவாக்கும் நோக்கிலே தமிழக முதலமைச்சர் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துக் கொள்வதிலே மகிழ்ச்சியடைகின்றேன்.

இதேபோல, சென்ற ஆண்டு உயர்கல்வித் துறை தொடர்பாக வெளியிடப்பட்ட 42 அறிவிப்புகளில் 41 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளதையும் வரவேற்கின்றேன். 12வது ஐந்தாண்டுத் திட்டத்திலே, அதாவது 2012-17 கால கட்டத்திலே அனைவருக்கும் உயர்கல்வியைக் கொண்டு செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த அரசு செயல்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன். இந்த நோக்கத்தை அடைவதற்காக, எனது சில ஆலோசனைகளை இந்த அவையிலே நான் முன்வைக்கின்றேன்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளிலே ஒய்வு, விருப்ப ஓய்வு, மரணம், பதவி விலகல் முதலிய காரணங்களினால் காலியாகக்கூடிய பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பல்லாண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை நடைமுறையில் இருப்பதைப் போல உடனடியாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(உயர் கல்வித்துறை அமைச்சர் குறிக்கிட்டு 3500 ஆசிரியர் பணிடங்கள் 1600 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்)

இதேபோல அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகளிலே உருது பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதையும் தாங்கள் கவனத்திலே கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

(உருது உதவி பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அமைச்சர் குறிக்கிட்டு குறிப்பிட்டார்.)

கடந்த 15 ஆண்டுகளாக Non-Salary Grant என்று சொல்லப்படகூடிய சம்பளம் அல்லாத மானியம் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை அரசு தணிக்கையை முடித்துள்ள கல்லூரிகளுக்கு இந்த மானியத்தை உடனடியாக வழங்க இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் சாசன சட்டத்தின் 30வது விதிமுறையின்படி நிறுவப்பட்டுள்ள கல்லூரி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் பெறும் முறையை எளிமைப்படுத்தி, National Commission for Minority Educational Institution என்ற தேசிய ஆணையத்தினுடைய ஆலோசனையைப் பெற்று துரிதமாக Minority Character Certificate சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழை பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும்

(அமைச்சர் குறிக்கிட்டு நடைமுறைகள் எளிமையாகக்கப்பட்டு சிறுபான்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சான்றிதழ் பெற்றால் போதும் என்று எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் ஒரு தனி ராஜ்யதையே நடத்தி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1980 ஆம் ஆண்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்தக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஏராளமான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மாணவர்கள் பொறியாளர்களாக வந்து இந்தியாவிலே ஒரு முன்மாதிரியாக நாம் விளங்குகிறோம், அதேபோல, தமிழ்நாடு அரசு, இந்த நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் அனுமதியில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 1996ல் சென்னையில் உள்ள எஸ்.ஐ.யி.டி. (SIET) என்று அழைக்கக்கூடிய ஜஸ்டிஸ் பஷிர் அகமது கல்லூரியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்குகொண்போதுதான் தமிழ்நாடு உருது அகாடமி உருது மொழிக்கான தனியாக ஒரு அகாடமி உருவாக்கப்படும் என்று கூறினார்கள். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு State Urdu Academy தமிழ்நாடு உருது கழகம் தொடங்கப்பட்டது.

சென்ற தி.மு.க ஆட்சியில் இந்த உருது அகாடமியினுடைய ஒரு கூட்டம் கூட நடைபெறவில்லை. எனவே, சிறுபான்மையின மக்களின் மீது மிகுந்த அக்கறையுள்ள இந்த அரசாங்கம் இந்த உருது அகாடமிக்கு என தனி அலுவலகம் அமைப்பதற்கும், அதற்கென முழுநேர பதிவாளர், அல்லது செயலாளரை நியமிப்பதற்கும் ஒருமுறை மானியமாக 1 கோடி ரூபாய் வழங்குவதற்கும் உருது மொழியினுடைய வளர்ச்சிக்காக இந்த கழகம் சிறப்பான முறையில் இயங்குவதற்கும் அரசு ஆவனச் செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆம்பூரில் ஒரு மகளிர் கல்லூரி அமைப்பதற்கும், இராமநாதபுரத்தில் சேதுபதி ஆண்கள் கல்லூரியினுடைய கட்டடங்கள் பழுதடைந்து இடிந்துவிழக்கூடிய நிலையில் உள்ளது. அதை சீர்செய்வதற்கும் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம், தமிழ், இளம் அறிவியல், வேதியியல், முதுகலையில் தமிழ், வணிகவியல் வகுப்புகள் தொடங்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சுயநிதி கல்லூரிகள் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் உள்நாட்டு சட்டம் 1977ன் விதிமுறைகளை கறாராக நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைபோல் சுயநிதி கல்லூரிகளில் படிக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மடிகணினி வழங்குவதற்கும் அரசு உதவித்தொகை பெறுவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக மிகச்சிறப்பான அறிவிப்புகளை தமிழக அரசின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். பாராட்டுகிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் பட்டப்படிப்புக்கு செல்லக்கூடிய மாணவர்களில் 70 விழுக்காடினர் தமிழ்வழி கல்வியில் பயில்கிறார்கள். கல்லூரிகளில் ஆங்கில வழியில் பாடம் நடத்தும்போது மிகத் திறமையாக ஆங்கிலப்பாடம் நடத்தும் பேராசிரியர்களும்கூட மாணவர்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்றால் தமிழுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே, தமிழக அரசு உயர்கல்வித் தொடர்பான பாட நூல்கள், ரேஃபரேன்ஸ் நூல்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக தமிழிலே மொழி பெயர்த்து வெளியிட்டால் மாணவர்களின் திறன் மேலும் வளர்வதற்கு வழிவகுக்கும் அதற்காக அமைச்சர் அவர்கள் ஆவன செய்வாரா? என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகின்றேன்.

(இது நல்ல ஆலோசனை. அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் பதிலளித்தார்)

Leave a Reply