உச்சநீதிமன்ற முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – மமக

1796 Views

மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபோன்ற வழக்கை உச்சநீதிமன்றம் சந்திப்பது முதன்முறை எனக் கூறிய நீதிபதிகள், வழக்கில் விரிவான விவாதங்கள் தேவைப்படுவதாக தெரிவித்தனர். எனவே வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்த நீதிபதிகள், அதனை 3 மாதத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், அந்த அமர்வுக்கு 7 கேள்விகளையும் முன்வைத்தனர். குறிப்பாக, சிறையிலுள்ள ஒருவரின் தண்டனையை ரத்துசெய்ய மத்திய அரசு அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது பற்றி அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.இதற்கிடையே, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதைத்தொடர்ந்து, அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. மத்திய அரசுக்கு சவால் விடும் விதத்தில் தமிழக அரசு நடந்துகொண்டு நிலைமையை அரசியல் அக்கப்போருக்குள் சிக்கவைத்ததால் தற்போது எழுவரின் விடுதலை மேலும் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள், இம்மூவரின் விடுதலை சம்பந்தமாக 26ம் தேதிக்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இம்மூவரும் விடுதலை அடைந்து விடுவார்கள் என தமிழக மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த நிலையில், இத்தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத்
இணை பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply