உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்!

2278 Views

உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்!

sha

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை:

அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பான வழக்கில் இந்த நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அலஹபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில், பண மாற்ற விவகாரம், ஜி.எஸ்.டி. விவகாரம், விவசாயிகள் தற்கொலைகள் ஆகியவற்றால் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும் சூழல் நிலவுவதால் அதை திசைமாற்ற ‘ராமர்கோயில் பிரச்சனை’யை பாஜக ஆதரவு சங்பரிவார அமைப்புகள் கையில் எடுத்துள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இதர பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் “ராமர்கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அதன் சார்பு அமைப்பான வி.எச்.பி. அயோத்தியில் மாநாட்டை அறிவித்து ஆயிரக்கணக்கானோரை கூட்டி “பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என மிரட்டல் விடுத்துள்ளது. பாபர் மஸ்ஜித் இடிப்பில் பங்குவகித்த சிவசேனாவும் தன் பங்கிற்கு தனியாக ஒரு கூட்டம் நடத்தி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வி.எச்.பி. மாநாடு காரணமாக அயோத்தியில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர்பயத்தில் அங்கிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளிவருகின்றன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் சூழலில், உச்சநீதிமன்றத்தை ஏற்க மாட்டோம் என்று கூறுவதும், உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்பே அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறுவதும் அரசியல் சாசன அமைப்புக்கு எதிரான செயல்களாகும். எனவே உச்சநீதிமன்றமே இந்த விஷயத்தில் தலையிட்டு, அரசியல் சாசன அமைப்புக்கு சவால் விடுக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

இப்படிக்கு,
செ. ஹைதர் அலி
பொதுச் செயலாளர்
தமுமுக

Leave a Reply