இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புதைவட மின் தட வசதி செய்து தரப்படுமா?

2594 Views
மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு மின்வடங்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனவைர் எம்.எச்.ஜவாஹிருல்லா நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கோரிக்கையும் அதற்கு மின்துறை அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு:
MH Jawahirullah_MMK
18.02.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும்.
பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புயல் காலங்களில் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் காற்ற வேகமாக வீசுவதன் காரணமாக, மின்வடங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஒரு சூழல் இருக்கின்றது. எனவே, மண்டபம் முதல் இராமேஸ்வரம் வரையுள்ள பகுதிகளில் புதைவட மின்தடங்கள் அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா எனத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு திரு. நத்தம் ஆர். விசுவநாதன் (மின்சாரத் துறை அமைச்சர்) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம்  பகுதியில் அடிக்கடி இயற்கைச் சீற்றங்களினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு பகுதியாகும், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மாண்புமிகு அம்மா தலைமையில் மீண்டும் புதிய ஆட்சி அமையும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அந்தப் புதிய ஆட்சியில் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை நிச்சயமாக கனிவுடன் பரிசீலிக்கப்படும். கடலூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து புதைவட மின்தடங்கள் அமைப்பது போன்று, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கும் புதைவட மின்தடங்கள்மூலம் மின்சாரம் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Leave a Reply