இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கு குளிர்சாதன விரைவுப் பேருந்து இயக்க எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

2225 Views

பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ்: இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கு குளிர்சாதன விரைவுப் பேருந்து இயக்க அரசு ஆவன செய்யுமா?

திரு. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கும், பெங்களுரிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் 2 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் 2 நடைகள் வீதம் இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி பேருந்து வசதிகளை இராமேஸ்வரம்-பெங்களுரு மற்றும் பெங்களுரு-இராமேஸ்வரம் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக உள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கு குளிர்சாதனப் பேருந்து இயக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ்:பேரவைத் தலைவர் அவர்களே, நமது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக செயல்படுவதற்கு இந்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் இராமேஸ்வரம் கோயில் அமைந்திருக்கக்கூடிய நகரம். இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வரக்கூடிய இடம். அதேபோல் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய ஒரு சூழலில் பெங்களுருக்கு நேரடியாக ரெயிலும் இல்லாத நிலையில் குளிர்சாதன பேருந்து விடுவது மிக மிக அவசியமாக இருக்கின்றது. எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் என்னுடைய கோரிக்கையை பரிசீலிக்க முன்வருவார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவைப் பெற்று நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ்: பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு, கிழக்கு கடற்கரை சாலை வாயிலாக கீழக்கரை, தூத்துக்குடி வழியாக இப்போது குறைந்த அளவிலேதான் பேருந்துகள் விடப்படுகின்றது. மீனவ மக்கள் இந்த வழித்தடத்தை அதிகமாக பயன்படுத்துவதற்கு உதவியாக அதிகமான பேருந்துகள் இராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்குக் கடற்கரை சாலை வழியாக விடுவதற்கு அமைச்சர் முன்வருவார்களா என்று உங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

திரு. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2011-12 ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட 3 ஆயிரம் புதியப் பேருந்துகள் கூண்டு கட்டி அந்தந்த புதிய வழித்தடங்களில் சுமார் 356 புதிய வழித்தடங்களில் இயக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய பேருந்துகள் கூண்டு கட்டுவது மிக விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பேருந்துகள் வரப்பெற்றபின்வு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கை முதல்வர் அவர்களுடைய உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply