1632 Views
ஆவணப் பட இயக்குநர் திவ்ய பாரதி வீட்டில் காவல்துறை அத்துமீறி சோதனை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஆவணப் பட இயக்குநரும் வழக்கறிஞருமான திவ்ய பாரதி வீட்டை காவல்துறை நேற்று அதிகாலையில் அத்துமீறி எவ்வித உரிய ஆவணமும் இன்றி முற்றுகையிட்டு சோதனையிட்டது கண்டனத்திற்குரியது.
“கக்கூஸ்” என்கிற ஆவணப் படத்தை இயக்கியிருந்த திவ்ய பாரதி தற்போது ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து “ஒருத்தரும் வரலே” என்கிற ஆவணப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ள நிலையில் அப்படத்தின் காணொளியைத் தேடி காவல் துறையினர் திவ்ய பாரதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டுள்ளது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயல்.
வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டது மட்டுமில்லாமல், அவர் நீதிமன்றத்திற்குச் செல்லும் போதும் அத்துமீறி அவரின் வாகனத்தின் சாவியை வலுக்கட்டாயமாக எடுத்து “விசாரணைக்கு வா” என்று மிரட்டி உள்ளனர்.
காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சமூக அக்கறையுடன் செயல்படும் இதுபோன்ற சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை முடக்கி அவர்களின் குரல்வலையை நெருக்கும் போக்கை காவல்துறைக் கைவிட வேண்டும் எனவும், ஆவணப் பட இயக்குநர் திவ்ய பாரதி விஷயத்தில் அத்துமீறி அராஜக முறையில் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி