ஆளுநர் உரை:தமிழகத்திற்கு பயனளிக்காத வெற்று உரை! மனிதநேய மக்கள் கட்சி கருத்து!

1645 Views
ஆளுநர் உரை:தமிழகத்திற்கு பயனளிக்காத வெற்று உரை!
 மனிதநேய மக்கள் கட்சி கருத்து!
alunar
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழக சட்டமன்ற பேரவையில் இன்று ஆளுநர் ஆற்றிய உரை மக்களுக்கு பயனளிக்காத வெற்று உரையாக அமைந்துள்ளது.
மத்திய அரசின் மாற்றந்தாய் போக்கினால் தமிழகம் கடும் நிதிப் பற்றாக்குறையால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் உதய் திட்டமும் 7வது ஊதியக் குழு பரிந்துரைகளும் மாநில அரசின் நிதிநிலையைக் கடுமையாக பாதித்திருக்கின்றன என ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளதும், ஜி.எஸ்.டி. வரி வசூலில் மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய பங்கை அளிப்பதிலும், வரி விதிப்புத் திட்டத்தில் உறுதியளித்தபடி வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனுக்குடன் வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் தாமதமும் மாநிலத்தின் நிதி நிலையைக் கடுமையாக பாதித்திருக்கிறது  என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாரபட்சமற்ற நியாயமான நிதிப் பகிர்வை 15வது நிதிக் குழு பின்பற்றுமென நம்புகிறேன் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டு அந்தப் பாரபட்சத்தைப் போக்க மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தை வழங்குவது குறித்து ஏதும் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான கொள்கை முடிவு பற்றியோ, கஜா புயலால் பாதிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள குறைந்த அளவிலான நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரும் எவ்வித அறிவிப்பும் உரையில் இடம் பெறவில்லை.
கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உரிய அறிவிப்புகள் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், மாநிலத்தில் இடைநிலை ஆசிரியர்கள், வி.ஏ.ஓ. உட்பட பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் போராட்டங்கள் குறித்தும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் எவ்விதமான உருப்படியான அறிவிப்பும் இல்லை.
விளைநிலங்களையும், விவசாயத்தையும் பெரிதும் பாதிக்கும் உயர் மின்கோபுரம் அமைப்பதை உடனடியாகக் கைவிட்டு கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் புதைவழியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தவது தொடர்பாக அறிவிப்பு இல்லை.
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்படுவதாக புகார்கள் அதிர்ச்சி அளிக்கும் உள்ள நிலையில் அதுதொடர்பாக எவ்வித அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை.
ஏற்கெனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதுகுறித்து முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மீண்டும் பல கோடிகளை செலவழித்து முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது வேடிக்கையானது.
லோக் ஆயுக்தாவில் புகார் அளிப்பவர் தமது விவரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரினால் அதில் ரகசியம் பாதுகாக்கலாமே தவிர, தமிழக அரசே முன்வந்து லோக் ஆயுக்தா புகார்தாரர் மற்றும் அவரால் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகியோரின் விவரங்கள் உள்ளிட்டவற்றை ரகசியமாக வைப்பது இந்த லோக் ஆயுக்தா அமைப்பைப் பலவீனப்படுத்தும் சூழல் உருவாகும் நிலையில் அதுதொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ஆளுநர் உரை வெறும் வெற்று உரையாகவே உள்ளது.
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இன்றைய ஆளுநர் உரை என்பது தமிழக மக்களுக்குப் பயனளிக்காத, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்காத வெற்று உரை என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply