ஆம்பூரில் அதிகமான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை கட்ட வேண்டும்

2839 Views

2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் ஆம்பூர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது:

அ. அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, 2011-12 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கைகளில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்திலுள்ள அனைத்து மக்களின் வீட்டு வசதி தேவையினை பூர்த்தி செய்யவும், அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தினை கொண்டு 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களில் 2011-12 ல் தமிழ்நாடு முழுவதும் 2427 அலகுகள் 118.92 ஏக்கரில் ரூ.340 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

அதேபோல் நகர்ப்புற ஏழைகளுக்கான வட்டி மானியத்துடன் கூடிய வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம், பழுதடைந்த வாரிய கட்டடங்கள் மறு சீரமைப்புத் திட்டம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் 2011-2012 ல் பல்வேறு திட்டங்களில் 10000 குடியிருப்புகள்/மனைகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளும், 4000 குடியிருப்புகள்/மனைகளுக்கு விற்பனை பத்திரங்களும் வழங்கப்படும் என்பதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது.

அதேசமயம், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள் பணம் முழுவதையும் செலுத்தியவர்களுக்கு இன்னும் விற்பனை பத்திரம் வழங்காமல் உள்ளது. பத்திரங்கள் வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

சென்ற தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடங்கள்/மனைகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுவதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கப்பட்டவர்களாகப் பார்கின்றனர். ஆவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கவும் மறுக்கின்றனர். ஆகவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரித்தால் கட்டப்படும் வீடுகளில் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது வீட்டு மனைகள் விலை அதிகமாக உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது. வீட்டு மனை விலையைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்கவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நகரப் பகுதிகளில் அதிகப்படியான வீடுகளைக் கட்டி விற்பனை செய்ய வேண்டும். அவற்றில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புகளை ஆய்வு செய்து மிகவும் மோசமாக உள்ள குடியிருப்புகளை சீர் செய்ய ஆவன செய்ய வேண்டும். சென்ற 2007 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 20 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மனைகள் அல்லது வீடுகள் ஒதுக்கீடு செய்யும்போது 15 சதவீதம் அரசின் விருப்பு உரிமை கோட்டாவில் ஒதுக்கப்படும் இதை விதவைகள், சமூகச் சேவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் இராணுவத்தினர், மூத்த குடிமகன்கள், சுதந்திர போரட்ட தியாகிகள், விளையாட்டு வீரர்கள், அப்பற்ற அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் சென்ற தி.மு.க. ஆட்சியில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். ஆதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விதிமுறைகள் மீறப்பட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு என்னுடைய ஆம்பூர் தொகுதியிலே, ஆம்பூர் நகரத்திலே 1984 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சென்ற தி.மு.க. ஆட்சியில் நாங்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. ஆகவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவற்றை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆம்பூர் நகரத்திலே 1,15,000- க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. ஏற்கெனவே இருக்கின்ற அடுக்குமாடிக் குடியிருப்புகள் போதாமல் உள்ளது. மீண்டும் Phase–2, Phase-3, போன்ற இன்னும் நிறைய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply