அரசியல் சாசன சட்டத்தின் நெறிமுறைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்! மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின வாழ்த்துச்செய்தி

2570 Views
அரசியல் சாசன சட்டத்தின் நெறிமுறைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்!
மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின வாழ்த்துச்செய்தி
MHJ (2)
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும்  குடியரசு தின வாழ்த்துச்செய்தி அறிக்கை:

நெஞ்சார்ந்த குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகிலேயே மிக நீளமானதான நமது அரசியலமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 முதல் அமுலுக்கு வந்தது. நமது இந்தியாவை ஒரு மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசாக பிரகடனப்படுத்தியது நமது அரசியலமைப்புச் சட்டம். இதைக் கொண்டாடும் வகையில்தான் ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியர்கள் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சாசனமாக நமது அரசியலமைப்புச் சட்டம் விளங்குகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பல்வேறு விதிகள் அனைத்து இந்தியர்களின் உரிமைகளை அவர்களது தனித்த அடையாளங்களைத் தாண்டி பாதுகாக்கின்றது. எண்ணற்ற கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் தனி பண்புகள் கொண்ட நமது நாட்டில் அனைவருக்குமான உரிமைகளையும் தனித்துவங்களையும் பாதுகாக்கின்ற வகையில் நமது அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இயற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் இயற்றப்பட வேண்டியது இன்றியமையாதது ஆகும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாத்துள்ள உரிமைகளைப் புறந்தள்ள இந்த நாட்டில் உள்ள எவருக்கும் உரிமை இல்லை.
நாட்டின் 69வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில் சில அச்சங்கள் நம் எண்ணங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களைத் தாங்கி உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை தலைகீழாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று அரசியல் சாசனத்தின் பால் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டு மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் சில உறுப்பினர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், நாட்டில் ஜனநாயகத்திற்கே ஆபத்து என்று எச்சரித்துள்ளார்கள். அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், மாநில அரசுகளுக்கு அளித்துள்ள உரிமைகளும் மெல்ல மெல்ல அபகரிக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு முரணாக சட்டங்களும் இயற்றப்படுகின்றன.
இவையெல்லாம் மதசார்பற்ற ஜனநாயக சோசலிச நாடாக இந்தியா திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் கவலையை அளித்துள்ளது. இந்தக் கவலைகளையெல்லாம் பிரதிபலிக்கும் வகையில் ஜனவரி 26ஐ “அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்” என்ற முழுக்கத்துடன் அனுஷ்திக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply