அசாமில் மாட்டுக்கறி விற்ற முதியவர் மீது கொடூர தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1610 Views
அசாமில் மாட்டுக்கறி விற்ற முதியவர் மீது கொடூர தாக்குதல்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
அசாம் மாநிலம் பிஸ்வானத் பகுதியில் மாட்டுக்கறி விற்பனை செய்த 68 வயது முதியவர் சவ்கத் அலி என்பவரைப் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு பயங்கரவாதக் கும்பல் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதோடு, அவரை பன்றி இறைச்சி சாப்பிடுமாறு வற்புறுத்தியது உச்சக்கட்ட கொடுமையாகும். இந்த கொடூரச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாகச் சென்று முஸ்லிம்கள், தலித்களைத் தாக்கி அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது.
மாட்டுக்கறியை உண்ணக்கூடாது; விற்கக்கூடாது என்பவர்கள் மாட்டுக்கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிபணிந்து அவர்களிடம் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு சிறிய கடையை நடத்திவந்த முதியவரைத் தாக்கியது வெட்கக் கேடானது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதற்காக, மாவட்டந்தோறும் பிரத்தியேக கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்குமாறும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற கொடூர தாக்குதல் நடத்தியவர்களைத் தண்டிக்க இம்மியளவும் முயலவில்லை என்பது வேதனையானது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரங்களால் நடத்தப்படும் கும்பல் வன்முறைகளுக்கும், வன்முறையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சட்டம் இயற்றப்படும் எனக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுபோன்ற ஒரு சட்டம் தான் இதுபோன்ற கொடூரத் தாக்குதல்களையும், கொலைகளையும் தடுத்து நிறுத்தும் என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
இக்கொடூரங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனில்  நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை மலரச்செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply