சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

286 Views

சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

சென்னை மாவட்ட திமுகவின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கியவர் ஜெ. அன்பழகன். ஆற்றல் மிக்க செயல்வீரராக விளங்கியவர். துணிச்சலாகத் தனது கருத்துகளை பதிவு செய்வதில் தனி முத்திரை பதித்தவர் ஜெ.அன்பழகன். 2011-16 காலகட்டத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் தவறுகளை வீரியத்துடன் எதிர்த்து மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர் ஜெ.அன்பழகன். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி தன் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்.

கொரோனா நிவாரணங்களை மக்களுக்கு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில் ஜெ. அன்பழகன் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தனது இறுதி மூச்சு வரை மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த ஜெ. அன்பழகனின் இறப்பு அவரது தொகுதி மக்களுக்கும் தென் சென்னை மாவட்டத்திற்கும் தி.மு.க.விற்கும் பேரிழப்பாகும்.

ஜெ. அன்பழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக தோழர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map