2013ல் பேரா. வைத்த கோரிக்கையும், முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்!

1784 Views
சட்டமன்றத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 30-04-2013 அன்று வைத்த கோரிக்கையும்
முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்.
MHJ-2
 
30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா?
 
மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான 8383 ஹெக்டேரில் மட்டும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. 836 இலட்சம் தேங்காய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாலும், இதுவரை கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அங்கே தொடங்கப் படவில்லை இருப்பினும் கொப்பரைவரத்தின் அடிப்படையில், தேவை ஏற்படும் பட்சத்தில் முறையான கருத்துரு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பெறப்பட்டு, TANFED நிறுவனம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் தொடங்குது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பரிசீலனை செய்யும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: 1960-களிலே மத்திய, மாநில அரசுகள் எண்ணெய்வித்துகளை ஊக்குவிப்பதற்காக முதன்முறையாக இராமநாதபுரம் மாவட்டத்திலே, தென்னை விவசாயம் தொடங்கப்பட்டது. கீழக்கரை, காஞ்சிரங்குடி, ரெகுநாதபுரம், தாமரைக்குளம், பெரியப்பட்டணம் உள்பட எனக்கு தெரிந்த என்னுடைய ஆய்விலே 10000 ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெற்றுவருகிறது. 2 இலட்சம் மக்கள் அதை நம்பி வாழ்கிறார்கள். எனவே அங்கே கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் மிகவும் அவசியமாக இருக்கிறது. அதை இந்த அரசு பரிசீ-க்கும் என்று சொன்னதற்காக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று, தேங்காயைக் கொள்முதல் செய்வதற்கும், கொப்பரைக்கான கொள்முதல் விலையை 70 ரூபாயாக உயர்த்துவதற்கும் இந்த அரசு முன்வருமா என்று தங்கள் மூலமாக வினவ விரும்புகின்றேன்.
 
மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: ஆண்டுதோறும் மத்திய அரசு வேளாண் செலவு விலை நிர்ணய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கொப்பரைக் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து வருகிறது. நடப்பு 2012-2013 நிதியாண்டில், அரவை கொப்பரை விலை கிலோ 52 ரூபாய் 50 பைசா எனவும், தண்டு கொப்பரை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய் எனவும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசு தேசிய அளவில் கொப்பரைக் கொள்முதலுக்கு தேசிய வேளாண் விற்பனை இணையத்தினை மையக் கொள்முதல் முகவராக நியமித்துள்ளது. NAFED நிறுவனம் தமிழ்நாட்டில் அரவைக் கொப்பரைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக முகவராக இருந்து கொள்முதல் செய்து வருகிறது. ஏனென்றால் கொப்பரைக்கான விலையை நிர்ணயம் செய்வது என்பது மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. எனவே, தற்போது கொப்பரை கிலோ ஒன்றுக்கு 52 ரூபாய் 50 காசுகள் எனவும் தண்டுக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய் எனவும் நாங்கள் கொள்முதல் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: கொப்பரை தேங்காய்க்கு ஒரு கிலோ ரூ 70 ஆக விலை நிர்ணயம் செய்ய அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்: கொப்பரைக்கான ஆதரவிலை ஒவ்வொரு வருடமும் மத்திய அரசினால் நிர்ணயம் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டு 2012க்கு மத்திய அரசு பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ 53.50 என்றும் அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ 51 என்றும் நிர்ணயம் செய்து உள்ளது. கொப்பரைகளுக்கான விலை மத்திய அரசு அளவிலேயே நிர்ணயம் செய்யப்படுவதால் மாநில அரசால் கொப்பரைக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய இயலாது.
 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: விவசாயிகள் தேங்காயைப் பறித்து, கொப்பரையைப் பிரித்து, வெயிலில் காயவைக்க பெரிய அளவில் உலர் களம் இல்லை. கொப்பரையைப் பல துண்டுகளாக வெட்டி, காய வைக்க தொழிலாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இப்பிரச்சினையால் வியாபாரிகளிடம் தேங்காயை விற்றுவிடுகின்றனர். வியாபாரிகள் பெரிய
அளவிலான குடோன்களை வைத்துக்கொண்டு, கொப்பரையைத் துண்டுகளாக ஆக்கி, நிறுவனத்திடம் கொடுக்கின்றனர். அப்படிக் கொடுக்கும் கொப்பரையை, ஏதாவது ஒரு விவசாயி பெயரில் ரசீது போடுகிறார்கள். இந்தத் தவறைத் திருத்துவதற்கும் இந்த அரசு முன்வர
வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், இராமநாதபுரத்திலே கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
==========================================
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சுமார் 4,28,000 ஹெக்டேர் பரப்பரளவில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும் சாகுபடி பரப்பில் மூன்றா மிடத்திலும் உள்ளது.
 
தற்போது சந்தையில் கொப்பரை தேங்காயின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக உள்ளதால், கொப்பரைத் தேங்காயை அரசு கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், தேர்தல் அறிக்கையில் ‘கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற வாக்குறுதியை நான் அளித்திருந்தேன்.
 
தற்போது கொப்பரைத் தேங்காய் விலை குறைந்துள்ள தால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேவை யான நடவடிக்கையை எடுப்பதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசின் ஆலோசகர்ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர் முனைவர் விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென்னை விவசாயி களின் நலன் காக்கும் வகையில் கொப்பரைத் தேங்காயை விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கை களை எடுக்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
இதன்படி,
 
1. கொப்பரைத் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாருர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக நேரடி கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும்.
 
2. அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 59 ரூபாய் 50 காசு, பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு 62 ரூபாய் 40 காசு என்ற ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கொப்பரைத் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.
3. இந்தக் கொள்முதலுக்குத் தேவையான 10 கோடி ரூபாய் நடைமுறை மூலதனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
 
4. கொள்முதல் செய்யப் படும் கொப்பரைத் தேங்காய்க் கான தொகை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு நிதி பரிமாற்றம் மூலமாகவோ, கோடிட்ட காசோலை மூலமாகவோ உடனடியாக வழங்கப்படும்.
 
5. இந்த நேரடி கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கு விவசாயிகளால் செலுத்தப் பட வேண்டிய 1 விழுக்காடு சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
 
6. தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் கேட்டுக் கொண்டபடி, கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்யும் போது மாநில அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய 5 விழுக்காடு மதிப்பு கூட்டு வரி முற்றிலு மாக ரத்து செய்யப்படும்.
 
7. இந்த நேரடி கொள் முதல் நிலையங்கள் எதிர்வரும் 15.6.2016 முதல் செயல்படும். கொப்பரைத் தேங்காய்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு கொள்முதல் செய்யப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தென்னை விவசாயிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Leave a Reply