18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து!

1495 Views
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது! மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!
mhj1 (2)
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழக சட்டமன்ற சபாநாயகர் இன்று அதிமுகவைச் சேர்ந்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துள்ளதாக அவருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தனர் என்ற ஒரே காரணத்திற்காக 18 சட்டமன்ற உறுப்பினர்களை கொறடாவின் பரிந்துரையின் பெயரில் தகுதி நீக்கம் செய்துள்ளது ஒரு ஜனநாயகப் படுகொலையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
கட்சித்தாவல் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விதிமுறையையும் மீறாத இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சட்டமன்ற பேரவையின் சபாநாயகர் நீக்கியிருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான கண்டிக்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்தத் தகுதி நீக்கத்தின் மூலம் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவே திரு.எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கத்துடன் குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றப் பேரவையின் உள்ளே மட்டுமே கட்சி கொறடாவின் உத்தரவு கட்டுப்படுத்துமே தவிர சட்டமன்றத்தின் வெளியே நடக்கும் நடவடிக்கைகளுக்கு கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்பது விதி. சபைக்குள்ளே எந்த நிகழ்வும் இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் நடைபெறவில்லை. மேலும் கட்சித்தாவல் என்ற விதியின் அடிப்படையிலேயே தினகரன் அணியினர் தகுதி நீக்கம் என்றால், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி திரு. பன்னீர் செல்வம் அணியினர் அரசிற்கு எதிராக வாக்களித்த சூழலில் அவர்களுக்கு எதிராக சபாநாயகர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தற்போது ஜனநாயக நெறிமுறைகளை மீறி அவசர அவசரமாக 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்திருப்பது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கே உள்ள பாரம்பரியத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாக அமைந்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அதிமுக கட்சி பெயரும், கட்சியின் சின்னம் இரட்டை இலையும் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சி தாவுதல் என்ற உண்மைக்குப் புறம்பான காரணத்தைக் கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற்று எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஜனநாயக வழியில் மக்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை தமிழகத்தில் இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map