சத்துணவில் முட்டை விநியோகம் நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சத்துணவில் முட்டை விநியோகம் நிறுத்தம்!

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

Mid day Meal

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட அங்கன்வாடி குழந்தைகள் முதல் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் வரை சத்துணவில் தினமும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் தமிழகத்தில் சுமார் 70 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
முட்டை விலையேற்றத்தைக் காரணம் காட்டி சத்துணவுத் திட்டத்திற்காக தமிழக அரசு முட்டைகளைக் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே அங்காடி மையங்களை மூட முனைப்புடன் செயல்படும் பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் கைகோர்த்துள்ள தமிழக அரசு, விலையேற்றத்தைக் காரணம் காட்டி முட்டையைக் கொள்முதல் செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. முட்டை விநியோகத்தை நிறுத்தினால் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகளில் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உருவாகும்.
அங்கன்வாடி மற்றும் பள்ளிக் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஊட்டச்சத்தான முட்டை விநியோகத்தில் தமிழக அரசு அக்கறை செலுத்தி உடனே முட்டைகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply