தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

1047 Views

அறிவாற்றாலும் துணிச்சலும் மனவலிமையும் நிறைந்தவர்;
கட்டுக்கோப்பாக அரசியல் கட்சியை நடத்துவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்;
சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்…

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

jaya

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி  அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவாற்றலும் மதிநுட்பமும் நிறைந்திருந்த அரசியல் தலைவராக விளங்கினார். தனக்கு சரியென தெரிந்ததை மிகுந்த துணிச்சலுடன் நடைமுறைப்படுத்தும் மன வலிமையுடையவராக அவர் திகழ்ந்தார். கட்டுக்கோப்புடன் ஒரு அரசியல் கட்சியை நடத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுக விளங்கியது. பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் தனது அரசியல் வாழ்வில் சந்தித்தாலும் மிகுந்த துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றிப் பெற்ற ஒரு இரும்பு மங்கையாக விளங்கியவர் காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

தமிழகத்தில் நிலவும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை காப்பாற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் அதனை இடம்பெற வைத்து சமூக நீதியை தக்கவைத்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். இந்தி திணிப்பு, நீட் போன்ற தொழில் கல்விக்கு நுழைவுத் தேர்வு, மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய சட்டங்கள் முதலியவற்றை உறுதியுடன் எதிர்த்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுடன் 1999 முதல் அரசியல் ரீதியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறை அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து வருவது தொடர்பாக அப்போது எதிர்க்ட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை முதன் முறையாக அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முறையிட்டோம். அப்போது துணிச்சலாக அவர் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காவல்துறையின் தீவிர விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.

1999 ஜூலை 4 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முனனேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைத்த போது உடனடியாக அவர் மாநாட்டிற்கு வருகை தர இசைவு தந்தார். மாநாட்டில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உரையில்…

“இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்த தவறுக்குப் பரிகாரமாகத் தான் பிஜேபி ஆட்சியை நானே கவிழ்த்தேன் இனி ஒரு போதும் அஇஅதிமுக பிஜேபியுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்.” என்று உரையாற்றினார்.

இதன் பிறகு தமிழகத்தில் பாஜகவிற்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதற்கு செல்வி ஜெயலலிதா பெரிதும் காரணமாக இருந்து வந்தார். அவ்வப்போது சங் பரிவாரைச் சேர்ந்த சில அதிதீவிரவாதிகள் தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்படும் போது துணிச்சலாக அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்ததையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன். தவறு செய்தவர் சங்கராச்சாரியாராக இருந்தாலும் எவ்வித சமரசமும் இல்லாமல் அவரைக் கைது செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அவர் நிலைநாட்டியதும் அவரது 15 ஆண்டு கால ஆட்சியின் மணிமகுடங்களில் ஒன்று.  அவரது இந்த நிலைப்பாட்டை எதிர்காலத்திலும் அஇஅதிமுகவினர் உறுதியுடன் கடைப்பிடிப்பர் என்று நம்புகிறேன்.

2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி சொந்த சின்னத்தில் இரண்டு இடங்களில் வெற்றிபெற செல்வி ஜெயலலிதா அவர்கள் உறுதுணையாக இருந்தார் என்பதை இங்கே நன்றியுடன்  நினைவுகூர்கிறேன்.

வடநாட்டில் இருப்பது போல் முஸ்லிம்களை அழைத்து தனது செலவில் ரமலான் நோன்பு திறப்பு விழாக்களை நடத்தி தமிழகத்தில் ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்தியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

14வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் அவர் உணர்ச்சிகரமாக “நான் மறைந்த பிறகும் அஇஅதிமுக நிலைத்து நிற்கும்” என்று குறிப்பிட்டார். 3வயதில் தந்தையையும் 22 வயதில் தாயையும் இழந்து வாழ்வில் கடுமையான சோதனைகளை எதிர்கொண்டு கோடிக்கணக்கான தமிழக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறைவு ஒத்துமொத்த தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு இறைவன் அழகிய பொறுமையை அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.

எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply