விவசாய நிலத்தில் கெயில் குழாய்கள் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விவசாய நிலத்தில் கெயில் குழாய்கள் பதிப்புக்கு
எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
mhj new
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கொச்சியிலிருந்து பெங்களூரு வரை திரவக நிலையில் எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்குக் கொண்டுசெல்ல தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி என 7 மாவட்டங்களில் உள்ள 310 கிலோ மீட்டர் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி உட்பட அரசியல் கட்சிகள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் குழாய் பதிக்கும் பணி இன்று மீண்டும் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள கோயில் நத்தம் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக்  குழாய் பதிக்கும் பணியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். பண்ணைகள், கிணறுகள், நீர்த்தொட்டிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து குழாய் பதிக்கும் பணியை நிறுத்தக் கோரிய அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 9 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்தக் கைது நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வளர்ச்சி என்ற பெயரால் புதிய புதிய திட்டங்களைக் கொண்டுவந்து அதற்காக காலங்காலமாக பயன்தரக்கூடிய விவசாயம் அழிவதை  ஏற்றுக் கொள்ள இயலாது. சில ஆண்டுகள் பயன்தரக்கூடிய கெயில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீயூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு பல தலைமுறைக்கு பலன்அளிக்கும் விவசாயத்தை அழிப்பது என்பது கண்களை விற்று சித்திரம் வரைவதற்கு சமம்.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்காக பாடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு, பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்காக தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கெனவே வறட்சி, மழை வெள்ளம், கடன் சுமை போன்ற பிரச்சினைகளால் விவசாயிகளும், விவசாயமும் அழிந்துவரும் சூழலில் விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிப்பு என்பது மென்மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாழாக்கிவிடும்.
எனவே, கெயில் குழாய் பதிப்பு பணிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், கெயிலுக்கு எதிராகப் போராடிய அனைவரின் மீதும் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாநில அரசையும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply